
புதுடெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதியதில் முறைகேடுகளில் ஈடுபட்டடதாக குற்றஞ்சாட்டப்பட்ட பூஜா கேத்கருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், பூஜா விசாரணையில் துளியும் ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவருக்கு முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்த டெல்லி போலீஸாரையும் உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது.
“பூஜா கொலைகாரரோ, தீவிரவாதியோ இல்லை. நீங்கள்தான் விசாரணையை முடித்திருக்க வேண்டும். அதற்காக உங்களிடம் ஒரு வழிமுறை இருந்திருக்கும். அவர் இப்போது அனைத்தையும் இழந்துவிட்டார். அவரால் எங்கேயும் வேலை பெற முடியாது. இந்த வழக்கின் தன்மையைப் பார்க்கும்போது டெல்லி உயர் நீதிமன்றமே பூஜாவுக்கு முன் ஜாமீன் வழங்கியிருக்கலாம்” என்று நீதிமன்றம் தெரிவித்தது. அதேவேளையில், பூஜா கேத்கர் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.