
கோவை மாவட்டம், மருதமலை அடிவாரத்தில் சுமார் 16 வயது மதிப்புடைய பெண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை கண்டறியப்பட்டது.
அந்த யானை அருகிலேயே 2-3 வயது மதிக்கத்தக்க அதன் குட்டி யானை பரிதவிப்புடன், அதை எழுப்ப முயற்சி செய்தது இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
ஒரு கட்டத்தில் குட்டி யானை வனப்பகுதிக்கு சென்ற நிலையில், தாய் யானைக்கு கடந்த மே 17-ம் தேதி முதல் வனத்துறை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். கும்கி யானை மற்றும் கிரேன் உதவியுடன் வனத்துறையினர் பெண் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
அதில், யானையின் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் வனத்துறை கூறியிருந்தது. 5 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். நான்கு நாள்களாக யானைக்கு 100-க்கும் மேற்பட்ட குளுக்கோஸ் பாட்டில்கள், மருந்துகள் மற்றும் ஹைட்ரோதெரஃபி முறை சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி யானை நேற்று உயிரிழந்தது.
“யானைக்கு திடீரென்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்நிருக்கலாம்.” என்று வனத்துறையினர் கூறியுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த யானையின் உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது யானையின் கர்பப்பையில் சுமார் 15 மாதம் மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டது. மேலும் அதன் வயிற்றில் இருந்து ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மீட்கப்பட்டன. மேலும் வயிற்றில் புழுக்களும் இருந்தன.

இதுகுறித்து வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உயிரிழந்த யானையின் வயிற்றில் உணவுகள் எதுவும் இல்லை. அதன் பெருங்குடலில் இருந்த சாணத்தில் பிளாஸ்டிக், அலுமினிய கழிவுகள் இருந்தன. சிறு குடலில் ஜீ்ரணம் ஆகாத பழங்கள் இருந்தன. யானையின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகரித்த காரணத்தால் உயிரிழந்துள்ளது. அதன் உடல் பாகங்களை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம்.
ரசாயனம் நிறைந்த பிளாஸ்டிக் கழிவுகள், கெட்டுப்போன உணவுக் கழிவுகளை சாப்பிட்டதால் உயிரிழந்திருக்கலாம்.
யானையின் வயிற்றில் குட்டி இருப்பதை கண்டறியும் தொழில்நுட்பம் வரவில்லை. குட்டி யானையின் உடலை ஆராய்ச்சி பயன்பாட்டுக்காக வண்டலூர் அனுப்புகிறோம்.” என்றார்.