• May 21, 2025
  • NewsEditor
  • 0

கர்நாடகாவில் எஸ்.பி.ஐ வங்கியில், உள்ளூர் வாடிக்கையாளரிடம் வங்கியின் மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்து, “இது இந்தியா இந்தியில்தான் தான் பேசுவேன். ஒருபோதும் கன்னடத்தில் பேசமாட்டேன்” என்று கூறும் வீடியோ இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவில், வாடிக்கையாளர், “இது கர்நாடகா. எந்த மாநிலமோ அந்த மாநில மொழியில் பேசவேண்டும் என ரிசர்வ் வங்கி விதி இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

அப்போதும் கூட, “கன்னடத்தில் பேச மாட்டேன், இந்தியில்தான் பேசுவேன். நீங்கள் சென்று எஸ்.பி.ஐ சேர்மனிடம் பேசுங்கள். ஒருபோதும் நான் கன்னடத்தில் பேசமாட்டேன்” என்று அதிகாரத் தொனியில் பேசினார்.

வீடியோவிலேயே, இது சூர்யா நகரிலுள்ள எஸ்.பி.ஐ கிளை என்றும் அந்த வாடிக்கையாளர் தெரிவித்தார். இந்த வீடியோ கன்னடர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைத் தூண்டியது.

SBI – State Bank of India

இந்த சம்பவம் தொடர்பாக, பெங்களூரு (தெற்கு) பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, “எஸ்.பி.ஐ கிளை மேலாளரின் இத்தகைய நடத்தை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

நீங்கள் கர்நாடகாவில் வங்கி போன்ற துறைகளில் வேலைபார்க்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் அறிந்த மொழியில் தொடர்புகொள்வது முக்கியம்.

இவ்வாறு ஆணவமாக இருப்பது சரியல்ல” என்று கண்டித்து, “இவ்வாறு நடந்துகொண்ட மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நான் பேசியுள்ளேன்.

கர்நாடகாவில் இயங்கும் வங்கிகள், வாடிக்கையாளர்ளுக்கு கன்னடத்தில் சேவை வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

பின்னர், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த எஸ்.பி.ஐ நிர்வாகம், சம்பந்தப்பட்ட மேலாளரை பணியிடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து மாநில முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “அனேகல் தாலுகா, சூர்யா நகரிலுள்ள எஸ்.பி.ஐ கிளை மேலாளர், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்து, குடிமக்களை அலட்சியப்படுத்திய நடத்தை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சம்பந்தப்பட்ட அதிகாரியை இடமாற்றம் செய்ததில் எஸ்.பி.ஐ-யின் விரைவான நடவடிக்கை பாராட்டத்தக்கது. இந்த விவகாரம் இப்போது முடிக்கப்பட்டதாகக் கருதப்படலாம். இருப்பினும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழக் கூடாது.

சித்தராமையா
சித்தராமையா

அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும். அதோடு, உள்ளூர் மொழியில் பேசுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

நாடு முழுவதுமுள்ள அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கலாசார மற்றும் மொழிப் பயிற்சியைக் கட்டாயமாக்குமாறு மத்திய நிதியமைச்சர் மற்றும் நிதி சேவைகள் துறையை நான் கேட்டுக்கொள்கிறேன். உள்ளூர் மொழிகளை மதிப்பதென்பது மக்களை மதிப்பதாகும்.” என்று பதிவிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *