
ராஜஸ்தானின் தௌசாவில் உள்ள ஒரு ஆசிரமத்தில், துறவியாக நடித்த சீரியல் கில்லர் தேவேந்திர சர்மா (67) கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மருத்துவரான இவர் டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா எனப் பல்வேறு மாநிலங்களில் 7 பேரை கொலை செய்திருக்கிறார்.
கொலை செய்தவர்களை உத்தரபிரதேசத்தின் காஸ்கஞ்சில் உள்ள ஹசாரா கால்வாயில் இருக்கும் முதலைகளுக்கு உணவாக போட்டிருக்கிறார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்த ஏழு தனித்தனி வழக்குகளில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குர்கான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனையும் விதித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, “BAMS (ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை) பட்டம் பெற்ற தேவேந்தர் சர்மா, முதன்முதலில் இவர் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போதே 125 பேருக்கு சட்டவிரோதமாக அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் 2004-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் முன்னெடுத்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதானல் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்.
போலியாக கார், லாரி போன்ற வாகனங்களை புக் செய்து, ஓட்டுநர்களை கொன்று அவர்களின் வாகனத்தை சந்தையில் விற்கும் கொடூரச் செயலை செய்துவந்திருக்கிறார். 2002 – 2004 க்கு இடையில் பல டாக்ஸி மற்றும் லாரி ஓட்டுநர்களைக் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார். இவர் மீது கொலை, கடத்தல் மற்றும் கொள்ளை என 27 வழக்குகள் இருக்கிறது.
50-க்கும் மேற்பட்ட கொலைகளில் இவர் ஈடுபட்டிருக்கிலாம் என கூறப்படுகிறது. அது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது. இவர் டாக்டர் டெத் என்றப் பெயரில்தான் அடையாளப்படுத்தப்படுகிறார்.
ஆகஸ்ட் 2023-ல் திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தபோது பரோலில் வெளியே வந்தார். அப்போது காவல்துறையிடமிருந்து தப்பிவிட்டார். அவரை காவல்துறை தேடி வந்தது. இந்த நிலையில்தான் ராஜஸ்தானில் இருக்கும் ஆசிரமத்தில் அவர் இருப்பதாக தகவல் கிடைத்தது. அவரை தற்போது கைது செய்திருக்கிறோம்” என்றார்.