
சென்னை: “பஹல்காம் சம்பவம் போன்ற தாக்குதல்களில் மத்திய அரசின் நடவடிக்கைகள் மந்தமாகவும், திட்டமில்லாதவையாகவும் இருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கை குறைவையும், உள்நாட்டுப் பாதுகாப்பு மீதான ஐயப்பாடுகளையும் எழுப்புகிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34-வது நினைவு நாளான இன்று, தமிழ்நாடு காங்கிரஸ் அவரது தியாகத்தையும், தொலைநோக்கு பார்வையையும், இந்தியாவின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்புகளையும் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்கிறது. மே 21 – தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நாளாகும். இந்த நாள், இந்திய மக்களின் ஒற்றுமையையும், நாட்டின் பாதுகாப்பையும், பல உயிர்த் தியாகங்களை நினைவுபடுத்தும் ஓர் உணர்வுமிக்க தருணமாக அமைந்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக, இந்தியா எப்போதும் உறுதியுடன் எதிர்நின்றுவரும் என்பதை உலகுக்கு தெளிவாகக் கூறும் நாளாகவும் இது விளங்குகிறது.