
நாயகனுக்குப் பிறகு மணிரத்னம் – கமல்ஹாசன் காம்போவில் வரும் படம் தக் லைஃப். இதில் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி, அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. அதனால், இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது. இந்தப் படம் ஜூன் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருக்கின்றனர். அதனால், இந்தப் படத்துக்கான புரோமோஷன் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
தற்போது டிரைலர் வெளியாகி கமல், சிம்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில், நடிகை த்ரிஷா நேற்று மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இந்தத் திரைப்படம் குறித்துப் பேசியிருந்தார்.
அதில், “இந்தப் படத்தில் நானும் இருக்கிறேன் எனக் கூறப்பட்டபோது நான் இதில் ஒப்பந்தமாகவில்லை. ஆனால் அப்போதே எங்களின் ஜோடி திரையில் மாயாஜாலமாக இருக்கும் என்றும், அதே நேரம் இதை விமர்சிப்பவர்களும் இருப்பார்கள் என்றும் எனக்குத் தெரியும். அதற்கு பிறகுதான் நான் இந்தப் படத்தில் கையெழுத்திட்டேன்.
கமல்ஹாசன், மணிரத்னம் இருவரும் எவ்வளவுப் புரிதலுடன் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட்டார்கள் என்பதை திரைக்குப் பின்னால் பார்ப்பது பெரிய அனுபவம். நடிகர்களாகிய நாம் அனைவரும் அவர்கள் இருவரும் வேலை செய்வதைப் பார்க்க வேண்டும்… அது ஒரு மாயாஜாலம் போல இருந்தது.” எனக் கூறியிருக்கிறார்.