
‘மும்பை vs டெல்லி!’
மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி இன்று வான்கடேவில் நடக்கவிருக்கிறது. ப்ளே ஆப்ஸில் இன்னும் ஒரே ஒரு இடம்தான் மீதமிருக்கிறது. அந்த ஒரு இடத்துக்குதான் மும்பையும் டெல்லியும் அடித்துக் கொண்டிருக்கின்றன. அப்படியிருக்க இந்தப் போட்டியின் முடிவுகள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
‘ப்ளே ஆப்ஸ் சாத்தியஙகள்…’
மும்பை அணி 12 போட்டிகளில் ஆடி 14 புள்ளிகளில் இருக்கிறது. டெல்லி அணி 12 போட்டிகளில் ஆடி 13 புள்ளிகளில் இருக்கிறது. வான்கடேவில் நடக்கும் இன்றைய போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றால் 16 புள்ளிகளுக்கு சென்றுவிடும். டெல்லி அணி அடுத்து ஆடும் போட்டியை வென்றாலும் அதிகபட்சமாக 15 புள்ளிகளுக்குதான் வர முடியும்.
ஆக, மும்பை அணி இன்றைய போட்டியை வென்றுவிட்டாலே எந்த சிரமும் இல்லாமல் ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெற்றுவிடும்.
ஒருவேளை டெல்லி இந்தப் போட்டியை வென்றால் ப்ளே ஆப்ஸ் ரேஸ் அதன்பிறகும் தொடரும். டெல்லி 15 புள்ளிகளில் இருக்கும். மும்பை, டெல்லி இரு அணிகளுக்குமே அடுத்தப் போட்டி பஞ்சாப் அணியோடுதான். அந்தப் போட்டியை இரு அணிகளும் வெல்ல வேண்டிய நிலை வரும். மும்பை வென்று டெல்லி தோற்றால் மும்பை தகுதிப்பெற்றுவிடும். மும்பை தோற்று டெல்லி வென்றால் டெல்லி தகுதிப்பெற்றுவிடும்.
இன்றைய போட்டியில் மழைக்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஒருவேளை மழை பெய்து, ஆளுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டால் மும்பை 15 புள்ளிகளிலும் டெல்லி 14 புள்ளிகளிலும் இருக்கும்.

அப்போதும் இரு அணிக்கும் பஞ்சாபுக்கு எதிரான கடைசிப் போட்டிதான் வாழ்வா சாவா போட்டியாக இருக்கும். அந்தப் போட்டியை இரு அணிகளும் வென்றாலோ தோற்றாலோ புள்ளிகளின் அடிப்படையில் மும்பையே ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெறும்.
இன்று நடைபெறப்போகும் மும்பை vs டெல்லி போட்டியை ஏறக்குறைய ஒரு நாக் அவுட் என்றே சொல்லலாம்.