
இந்தியிலிருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்டப் படம் ‘உயிரே’. இந்தப் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் பிரீத்தி ஜிந்தா.
இந்த ஒரே படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகையாகி, தொடர்ந்து இந்திப் படங்களில் நடித்து பிரபலமாக மாறினார். இமாச்சலின் ஷிம்லாவைச் சேர்ந்த பிரீத்தி ஜிந்தா பிலிம்பேர், சர்வதேச இந்திய திரைப்பட விருது, சிகாகோ சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார்.
நடிப்பு மட்டுமின்றி சமூக ஆர்வலராகவும், தொழிலதிபராகவும் உருவெடுத்த பிரீத்தி ஜிந்தா, கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளராக மாறினார்.
தனது அணி விளையாடும் போட்டியில் தவறாமல் கலந்துகொண்டு, அணி வீரர்களை உற்சாகப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் கடந்த 18-ம் தேதி பஞ்சாப் – ராஜ்ஸ்தான் அணி மோதிக்கொண்டது. இதில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது. இந்த மேட்சை பார்ப்பதற்காக பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா சென்றிருக்கிறார்.
போட்டி முடிந்ததும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூரியவன்ஷியும் பிரீத்தி ஜிந்தாவும் கட்டிப்பிடிப்பது போன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
அந்த வீடியோக்களை சில செய்தி சேனல்களும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் வலம் வந்தன.
இந்த நிலையில், நடிகை பிரீத்தி ஜிந்தா தன் எக்ஸ் பக்கத்தில், “இது ஒரு மார்பிங் செய்யப்பட்ட படம், போலி செய்தி. இப்போது செய்தி சேனல்களும் மார்பிங் செய்யப்பட்ட படங்களைப் பயன்படுத்தி அவற்றை செய்திகளாகக் காட்டுகின்றன என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!” எனக் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உண்மையான வீடியோவை வெளியிட்டது. அதில் இருவரும் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள் மட்டுமே இருக்கிறது.