• May 21, 2025
  • NewsEditor
  • 0

மும்பை எல்.டி மார்க் பகுதியை சேர்ந்த 34 வயதாகும் பெண் ஆசிரியைக்கு மெட்ரிமோனியல் தளம் மூலம் கொரோனா காலத்தில் வினீத் மல்ஹோத்ரா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பெண் ஆசிரியையிடம் திருமணம் செய்து கொள்வதாக மல்ஹோத்ரா தெரிவித்தார். ஆனால் வீடியோ காலில் வரவோ அல்லது நேரடியாக சந்திப்பதையோ மல்ஹோத்ரா தவிர்த்து வந்தார்.

ஆனால் நான்கு ஆண்டுகளில் தனது பெற்றோர் கொரோனாவிற்கு இறந்துவிட்டனர் என்றும் மருத்துவ அவசரம் என்றும் எதாவது ஒரு காரணத்தை சொல்லி பெண் ஆசிரியையிடம் பணம் பறிப்பதை மட்டும் வழக்கமாக கொண்டிருந்தார் மல்ஹோத்ரா.

புகாரும் விசாரணையும்

நான்கு ஆண்டில் பெண் ஆசிரியை 8 லட்சத்தை கொடுத்துவிட்டார். அப்படி இருந்தும் திருமணம் செய்யவோ அல்லது நேரில் வரவோ மல்ஹோத்ரா மறுத்தார். ஒரு கட்டத்தில் மல்ஹோத்ரா பெண் ஆசிரியையின் போன் நம்பரை பிளாக் செய்துவிட்டார். இதையடுத்து பெண் ஆசிரியை போலீஸில் புகார் செய்தார்.

அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்த ஆரம்பித்தனர். விசாரணையில் மல்ஹோத்ராவிடம் மும்பையை சேர்ந்த மேலும் ஒரு பெண் ஏமாந்திருப்பது தெரிய வந்தது. ஆனால் அந்த பெண் போலீஸில் புகார் செய்ய மறுத்துவிட்டார். பணம் கொடுத்த விபரங்களை மட்டும் பகிர்ந்து கொண்டார். ஆசிரியையும், அதே வங்கிக்கணக்கிற்குத்தான் பணம் அனுப்பி இருந்தார். போன் நம்பரும் ஒத்துப்போனது. இதையடுத்து அந்த நபர் எங்கிருக்கிறார் என்று பார்த்தபோது அவர் லக்னோவில் இருப்பது அவரது போன் சிக்னல் மூலம் தெரிய வந்தது.

பல கோடி மோசடி!

இதையடுத்து தனிப்படை போலீஸார் உடனே லக்னோவிற்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் மல்ஹோத்ராவை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அந்நபரின் உண்மையான பெயர் சிவம் என்று தெரிய வந்தது. அந்த நபரின் போனை ஆய்வு செய்தபோது அதில் 700 போன் நம்பர்களை வாட்ஸ் ஆப்பில் பிளாக் செய்து வைத்திருந்தார். அவர் அத்தனை பெண்களிடம் மோசடி செய்தாரா அல்லது அவர்களை தொடர்பு கொண்டு மோசடி செய்ய முயன்றாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இது தவிர சிவம் வங்கிக்கணக்கை ஆய்வு செய்தபோது அதில் 100 பேரிடமிருந்து பணம் வந்திருந்தது. இதன் மூலம் 100 பெண்களிடம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

மோசடி – சித்தரிப்பு படம்

இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, ”மெட்ரிமோனியல் தளத்தில் விவாகரத்தான மற்றும் கணவனை இழந்த பெண்களை குறித்து அவர்களிடம் திருமண ஆசை காட்டி பேச ஆரம்பித்து பல்வேறு காரணங்களை கூறி பணத்தை பறிப்பதை சிவம் வழக்கமாக கொண்டிருந்தார்.

சிவம் வங்கிக்கணக்கில் கடந்த 5 ஆண்டில் பல கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை செய்துள்ளார். சிவம் தவறை மறைத்து செய்யவில்லை. தனது சொந்த போன் நம்பரை பயன்படுத்தியே பெண்களிடம் பேசி இருக்கிறார். அதோடு தனது சொந்த வங்கி கணக்கையே பெண்களிடம் கொடுத்து பணத்தை அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

வினீத் மல்ஹோத்ரா அல்லது வருண் ஆகிய பெயர்களை பயன்படுத்தி இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் மோசடி செய்த பெண்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. பெண்கள் தங்களுக்கு தெரியாத நபர்களிடம் பழகும்போது மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *