
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஏழு மண்டலப் பொறுப்பாளர்களை அண்மையில் அறிவித்தது திமுக தலைமை. இதில் விழுப்புரத்தை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தின் பொறுப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டார். இதில் எழுந்த புகைச்சலை அடக்க, எட்டாவது மண்டலப் பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
1989-ல் திக இறக்குமதியாக திடீர் வேட்பாளராக பேராசிரியர் பொன்முடியை விழுப்புரத்தில் களமிறக்கியது திமுக தலைமை. அந்தத் தேர்தலில் வென்ற அவருக்கு அமைச்சரவையிலும் முக்கிய இடமளித்தார் கருணாநிதி. அது முதலே பொன்முடிக்கு பொற்காலம் தான். குறுகிய காலத்தில் தன்னை திமுக தலைமைக்கு நெருக்கமாக்கிக் கொண்ட பொன்முடி, சீக்கிரமே ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டச் செயலாளர் அளவுக்கு கட்சிக்குள் தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். இப்படியெல்லாம் திமுக-வுக்குள் தன்னை வளர்த்துக் கொண்ட பொன்முடி, தற்போது எந்தப் பதவியும் இல்லாமல் எம்எல்ஏ என்ற ஒற்றை அடையாளத்துடன் மட்டும் நிற்கிறார்.