
பாபநாசம்
பாபநாசம் கோயில் அருகே பரிகாரம் செய்து ஆற்றில் விடப்படும் துணிகளை அப்புறப்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டல் படி, நம் தாமிரபரணி மற்றும் நெல்லை உழவாரப் பணிக் குழாம், மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள், நம்பியாறு தன்னார்வலர்கள், வி.எம்.சத்திரம் டெவலப்மெண்ட் குரூப், உள்ளூர் பொது மக்கள் இணைந்து தாமிரபரணி ஆற்றை தூய்மை செய்தனர்.
தாமிரபரணி ஆற்றின் உள்பகுதியில் கிடந்த சுமார் நான்கு டன் துணிகள் மற்றும் சுற்றி இருந்த கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தினர்.
துணிகளை எக்ஸ்னோரா அமைப்பு மறுசுழற்சி செய்து கொள்வதாக தெரிவித்ததை தொடர்ந்து கரையில் மூட்டையாக கட்டி வைத்தனர்.
நதிக்கு செல்லும் பாதையை சுத்தம் செய்து படிக்கட்டுகளை சீராக்கினர். கரையோரம் குவிந்திருந்த நாள்பட்ட குப்பைகள், கழிவுகளை மேலேயுள்ள சாலைக்கு கொண்டு சென்று நகராட்சியினர் எடுத்துச் செல்ல ஏதுவாக குவித்தனர்.
கல்லிடைகுறிச்சி
‘நல்லோர் வட்டம்’ மற்றும் ‘நம் தாமிரபரணி’ இணைந்து “நமது ஆறு நமது பொறுப்பு” நிகழ்ச்சியை கல்லிடைகுறிச்சியில் நடத்தினர்.
தாசில்தார் செல்வம், நம் தாமிரபரணி அமைப்பு நல்லபெருமாள் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தாமிரபரணி ஆற்றங்கரைகளை சுத்தப்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் ஆற்றை தூய்மையாக வைத்துக்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
புகைப்படத் தொகுப்பு இதோ..





























