• May 21, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: என் தங்கைக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. தங்கையும் தங்கை கணவரும் ஓரளவு பருமனாக இருப்பார்கள்.

குழந்தையில்லையே என மருத்துவ சிகிச்சைக்குச் சென்றவர்களுக்கு, உடல் பருமன்தான் காரணம் என்றும், எடையைக் குறைக்கும்படியும் அறிவுறுத்தி அனுப்பிவிட்டார் மருத்துவர். இது எந்த அளவுக்கு உண்மை… உடல் பருமனால் குழந்தையின்மை பிரச்னை வருமா?

பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.  

பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்

உடல் பருமன் காரணமாக ஆண், பெண் இருவரின் உடலிலும் கொழுப்பின் சதவிகிதம் அதிகரிக்கும்போது, அதன் விளைவாக அவர்கள் இருவருக்குமே தாம்பத்திய உறவிலும் சிக்கல் வரும்… அதன் தொடர்ச்சியாக கருத்தரிப்பதிலும் சிக்கல் வரலாம்.

உடல் பருமனின் காரணமாக கொழுப்பின் சதவிகிதம் அதிகரிப்பதன் விளைவாக, இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் எனப்படும் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை நிலை உருவாகும். இந்நிலையில்,  நம் உடலின் செல்கள் இந்த இன்சுலினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் போகும். அதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். 

இன்சுலின் எதிர்ப்புத்தன்மை நிலையின் காரணமாக,  ஆண் உடலில் டெஸ்டோஸ்டீரான் மற்றும் பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் என இரண்டு ஹார்மோன்கள் சுரப்பதும் குறையத் தொடங்கும். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சுரப்பு குறைவதால் விந்தணுக்கள் சரியாக உற்பத்தியாகாது. அப்படியே உற்பத்தியானாலும் அவற்றின் தரம் சரியாக இருக்காது.

பருமன் காரணமாக தாம்பத்திய உறவில் ஈடுபடுவதிலும் சிக்கல் வரும், தவிர, உறவின் போது விந்தணுக்கள் பெண் உடலில் செல்வதிலும் தடை ஏற்படலாம்.

அதேபோல விறைப்புத்தன்மையில் சிக்கல் வரும். உடல் பருமனின் முக்கிய அடையாளமாக ஆண்- பெண்ணுக்கு வயிற்றுப் பகுதியில் அதிக சதை போடும். அந்த இடத்துப் பருமன் காரணமாக தாம்பத்திய உறவில் ஈடுபடுவதிலும் சிக்கல் வரும், தவிர, உறவின் போது விந்தணுக்கள் பெண் உடலில் செல்வதிலும் தடை ஏற்படலாம். 

பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள் குறைவதால், கருமுட்டைகளின் தரம் குறைவாக இருக்கும். சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும். மாதவிடாய் பிரச்னைகள் வரும். இந்தப் பிரச்னைகள் எல்லாம் சேர்ந்து குழந்தை தங்கும் வாய்ப்பைக் குறைக்கும். 

உடல் பருமன்

எனவே, உடல் பருமன் என்பது தலை முதல் பாதம்வரை உடலின் அனைத்து உறுப்புகளிலும் பிரச்னைகளை ஏற்படுத்துவதைப் போலவே, இல்லற வாழ்க்கையிலும் சிக்கல்களை ஏற்படுத்தி, குழந்தைப் பேற்றையும் பாதிக்கும் என்பதை மறக்க வேண்டாம். குழந்தைக்கான முயற்சியில் இருக்கும் தம்பதியர், உடல் பருமனோடு இருந்தால், இந்த விஷயங்களை முதலில் கவனத்தில் கொண்டு, எடையைக் குறைப்பதில் முயற்சி எடுக்க வேண்டும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *