
செயற்கை நுண்ணறிவு மிகப் பெரிய சக்தியாக வளர்ந்திருந்தாலும், அதனால் மனிதர்களைத் தாண்டிய புத்திக்கூர்மையுடன் செயல்பட முடியாதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது சமீபத்தில் நடந்த சம்பவம்.
ஸ்வீடனில் உள்ள நிதி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று மனிதர்களை வேலையிலிருந்து நிறுத்திவிட்டு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முயற்சியில் பலத்த அடி வாங்கியுள்ளது.
கிளார்னா ஒரு 46 பில்லியன் டாலர் மதிப்புகொண்ட நிதிதொழில்நுட்ப நிறுவனம். செயற்கை நுண்ணறிவின் மீதிருந்த அதீத நம்பிக்கையால், கடந்த ஆண்டு அவர்களது 700 பணியாளர்களை நீக்கிவிட்டு செயல்முறைகள் மொத்தத்தையும் தானியங்குமுறைக்கு மாற்றினர்.
ஏஐ புரட்சியால் ஏற்பட்ட நஷ்டம்!
இந்த நிறுவனத்தின் இணை நிறுவனரும் சி.இ.ஓ-வுமான செபாஸ்டியன் சீமியாட்கோவ்ஸ்கி, “மனிதர்களாகிய நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் AI ஏற்கெனவே செய்ய முடியும்” எனக் கூறினார்.
ஆனால் தற்போது, “மனிதர்களின் உழைப்பால் கிடைக்கும் தரத்தில் முதலீடு செய்வது நிறுவனத்தின் எதிர்காலத்துக்கு சிறந்ததாக அமையும்” எனக் கூறி வருகிறார்.
செபாஸ்டியன் சீமியாட்கோவ்ஸ்கி, நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கவும் போட்டி நிறைந்த துறையில் செயல் திறனை அதிகரிக்கவும் செயற்கை நுண்ணறிவை வழக்கமாக மனிதர்கள் செய்யும் பணிகளை மேற்கொள்ளச் செய்தார். ஆனால் அந்த முடிவு சரியானதாக அமையவில்லை.

கிளார்னா நிறுவனம் அதன்பிறகு ஏகப்பட்ட செயல்பாட்டு மற்றும் நன்மதிப்பு சிக்கல்களை எதிர்கொண்டது. குறிப்பாக வாடிக்கையாளர் ஆதரவு பிரிவில் பல புகார்கள் எழுந்துள்ளன.
மீண்டும் மனிதர்களுக்கு அழைப்பு
என்னதான் AI-ஐ பயன்படுத்தியது செலவுகளைக் குறைத்தாலும், ஒரு நிறுவனம் நிலைத்திருக்க தேவையான வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெற முடியவில்லை.
இதனால் கிளார்னா பல பில்லியன்கள் இழப்பைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. 700 பணியாளர்களை நீக்கிவிட்டு செயற்கை நுண்ணறிவை பணியில் ஈடுபடுத்திய முடிவை உலகமே உற்றுநோக்கியது. இப்போது ஒட்டுமொத்தமாக ஏ.ஐ மீதான பார்வையைத் திருப்பியுள்ளது கிளார்னாவின் முடிவு.

கிளார்னா மீண்டும் ஆள்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளதாக அவர்களது அறிக்கைகள் கூறுகின்றன. வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் முன்னர் மனதர்களால் நிரப்பப்பட்ட இடங்களுக்கு மீண்டும் பணியாளர்களை சேர்க்கின்றனர்.
இத்துடன் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்வது, வேலை நேரத்தில் நெகிழ்வுத்தன்மை என அதன் பணி தன்மையிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.