
கேரள மாநிலம், எர்ணாகுளம் செங்கமநாடு திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவருக்கும் குறுமசேரி பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருமணம் ஆகி மூன்றரை வயதில் கல்யாணி என்ற பெண் குழந்தை இருந்தது. மற்றக்குழி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கல்யாணியை சேர்த்திருந்தனர். பெற்றோர் தினமும் காலையில் அங்கன்வாடிக்கு கொண்டு விட்டுவிட்டு மாலையில் அழைத்துவருவது வழக்கம். நேற்று மாலை அங்கன்வாடி மையத்துக்கு குழந்தையை அழைத்துவர தாய் சந்தியா சென்றார். பின்னர் தனியாக வீடு திரும்பிய அவர் குழந்தையை பேருந்து பயணத்தின்போது தவறவிட்டுவிட்டதாக தெரிவித்தார். இதுபற்றி செங்கமநாடு போலீஸில் சுபாஷ் புகார் அளித்தார். எர்ணாகுளம் ரூரல் எஸ்.பி ஹேமலதா தலைமையில் போலீஸார் விரைந்து விசாரணை நடத்தினர். முதலில் தாய் சந்தியாவிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை கூறியுள்ளார்.
சந்தேகம் அடைந்த போலீஸார் அங்கன்வாடி மையத்துக்கு சென்றுவரும் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மூழிக்குளம் பகுதியில் குழந்தையுடன் சந்தியா நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகள் அடிப்படையில் போலீஸார் சந்தியாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மூழிக்குளம் பகுதியில் உள்ள சாலக்குடி ஆற்றில் குழந்தையை வீசி கொலை செய்ததாக தாய் சந்தியா ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் சுமார் 8 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தி இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் குழந்தையின் உடலை மீட்டனர்.

குடும்பத்தில் சில பிரச்னைகள் உள்ளதாகவும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே டார்ச் லைட்டை குழந்தையின் தலையில் அடித்தும், ஐஸ்கிரீமில் விஷம் கலந்துகொடுத்தும் குழந்தையை கொலைச் செய்ய சந்தியா முயன்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். சந்தியாமீது கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர். குடும்ப பிரச்னை காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு குழந்தையை கொலை செய்ததாக சந்தியா கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.