
‘சென்னை தோல்வி!’
ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. இந்தத் தோல்விக்கு தோனி எடுத்த சில முடிவுகளுமே முக்கிய காரணமாக இருந்தது. அதைப் பற்றிய அலசல்.
லாஜிக் இல்லாத பேட்டிங் ஆர்டர்:
‘பேட்டிங் ஆர்டரில் நாங்கள் இன்னும் வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு பேட்டருக்கும் என்ன ரோல் என்பதைக் கண்டடைந்து அடுத்து சீசனுக்குத் தயாராக வேண்டும்.’ டாஸில் தோனி இப்படித்தான் பேசியிருந்தார். இப்படி பேசிவிட்டு அஷ்வினை நம்பர் 4 இல் இறக்கியிருந்தார். இந்த முடிவில் என்ன லாஜிக் இருக்கிறது? இதை எப்படி நியாயப்படுத்த முடியும்.
தோனி டாஸில் பேசியதற்கே முரணான முடிவு இது. அடுத்த சீசனுக்கான விடைகளைத் தேட வேண்டும். பேட்டர்களுக்கு அவர்களுக்கான ரோலை தெளிவுப்படுத்த வேண்டும் என்கிறீர்கள். அப்படி பேசிவிட்டு அஷ்வினை நம்பர் 4 இல் இறக்குகிறீர்கள் எனில், அவரை அடுத்த சீசனுக்கான நம்பர் 4 வீரராகப் பார்க்கிறீர்களா? அப்படி பார்த்தால் அது சரியான முடிவா? பௌலிங்கிலேயே அவர் சரியான பார்மில் இல்லை.

அப்படியிருக்க அவரை மேலே இறக்குவது அவருக்குக் கூடுதல் அழுத்தத்தைதான் உண்டாக்கும். அதுபோக, ஜடேஜாவை இந்த சீசனில் நம்பர் 4 இல் இறக்கி ஓரளவுக்கு செட்டில் ஆக வைத்திருக்கிறீர்கள். இப்போது அவரை நம்பர் 5 க்கு இறக்கியதில் என்ன லாஜிக் இருக்கிறது? ஏன் வம்படியாக பேட்டிங் ஆர்டரில் இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்?
தோனியின் சொதப்பல் பேட்டிங்:
தோனி க்ரீஸூக்குள் வந்த அந்த 14 வது ஓவரின் முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 138. ஏறக்குறைய ரன்ரேட் 10. இதே ரன்ரேட்டில் சென்றிருந்தால் கூட சென்னை அணியால் 200 ரன்களை எடுத்திருக்க முடியும். டெத்தில் கொஞ்சம் வேகம் கூட்டியிருந்தால் 210-220 ரன்களுக்குக்கூட சென்றிருக்க முடியும். அப்படி சென்னை அணி 200 ரன்களைக் கடந்திருந்தால் ராஜஸ்தானுக்கு இன்னும் அழுத்தம் கூடியிருக்கும்.

ஏனெனில், இதற்கு முன்பு இந்த சீசனில் 9 போட்டிகளில் சேஸிங் செய்து 8 போட்டிகளை ராஜஸ்தான் தோற்றிருக்கிறது. அவர்களின் லோயர் மிடில் ஆர்டர் வீக். டெத்தில் ப்ரஷர் ஏற்றி வென்றுவிடலாம். சென்னை அணி 200 யை கடக்காமல் போனதற்கு தோனியின் பேட்டிங்கும் முக்கிய காரணமாக இருந்தது. 17 பந்துகளில் 16 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 100 கூட இல்லை.

எதிரணியினர் தோனி வந்த உடனேயே ஸ்பின்னர்களை அழைத்து வந்து விடுகிறார்கள். ஹசரங்கா, ரியான் பராக் ஆகியோரை தோனி வந்தவுடன் சாம்சன் அழைத்து வந்தார். ரியான் பராக்குக்கு எதிராக மட்டும் ஒரு சிக்சரை அடித்தார். ஸ்பின்னர்களின் ஸ்பெல் முடிந்த பிறகு அடிப்பார் எனப் பார்த்தால் அங்கேயும் வழியில்லை. ஏமாற்றமே மிச்சம்.
`லோயர் மிடில் ஆர்டரின் மீது அழுத்தம் அதிகம் இருந்தது. ஆல் அவுட் ஆகிவிடக்கூடாது என்றுதான் அப்படி ஆடினோம்’ என போட்டிக்குப் பிறகு தோனி விளக்கம் கொடுத்திருந்தார். இந்த தயக்கமே பழைய தலைமுறையுடையது. டி20 நவீனமாகிவிட்டது. இந்த சூழலுக்கு தோனியின் தயக்கமும் தற்காப்பு ஆட்டமும் வேலைக்காகாது.
மோசமான பதிரனா ரொட்டேஷன்:
பதிரனாவை நல்ல தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பௌலராக மாற்றியதும் தோனிதான். அவரை சரியாக உபயோகப்படுத்தாமல் சொதப்பிக் கொண்டிருப்பதும் தோனிதான். பதிரனாவை 9 வது ஓவரில்தான் தோனி அழைத்தார். அந்த 9 வது ஓவரில் 3 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஆனாலும் அடுத்த ஓவரைக் கொடுக்கவில்லை. அடுத்து 13 வது ஓவரைத்தான் கொடுத்தார்.

அதன்பிறகு ஆட்டமே முடிந்த பிறகு 18 வது ஓவர். இந்தப் போட்டி என்றில்லை. இந்த சீசன் முழுவதும் இதே கதைதான். ஆட்டம் முடிந்த பிறகுதான் பதிரனாவுக்கு ஓவரே கொடுப்பார். அப்படி ஓவர் கொடுக்க ரீட்டெய்ன் செய்யப்பட்ட பதிரனா போன்ற வீரர் எதற்கு? அவரை எதற்கு இம்பாக்ட் ப்ளேயராக எடுத்து வர வேண்டும். சிவம் துபேவே அந்த இரண்டு ஓவர்களை வீசி எதிரணிக்கு வின்னிங் ஷாட்களை அடிக்க உதவிக்கொடுப்பாரே?

தோனி எடுத்த லாஜிக்கே இல்லாத முடிவுகள்தான் இந்த சீசனின் பல தோல்விகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது. தோனியின் கேப்டன்சியை பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.