
இரண்டாம் உலகப் போருக்கு முன்பு இருந்த ஒரு ரகசிய நிலத்தடி மருத்துவமனையை ஜெர்மனை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்ததாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஜெர்மன் ஆய்வாளரான கார்ஸ்டன் ராபர்ட் என்பவர் கைவிடப்பட்ட மற்றும் மர்மமான இடங்களுக்கு சென்று அந்தப் பகுதி குறித்து ஆவணப்படுத்துவார்.
அவரின் வீடியோக்கள் அனைத்தும் தனித்து விடப்பட்ட அல்லது கைவிடப்பட்ட இடங்கள் குறித்தும் பகுதி குறித்தும் விளக்கப்படுவதாக இருக்கிறது.
கைவிடப்பட்ட திரையரங்கம், நிலத்தடியில் இருக்கும் பழைய தேவாலயம், கைவிடப்பட்ட அமானுஷ்ய மருத்துவமனை என பல பகுதிகளை குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் நிலத்துக்கு அடியில் இருக்கும் ஒரு மாறுபட்ட மறைக்கப்பட்ட இடம் குறித்து வெளியிட்டு இருந்தார்.
இரண்டாம் உலகப்போருக்கு முந்தையதாக இருந்த ஒரு நிலத்தடி மருத்துவமனை கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்தார்.
கார்ஸ்டன் ஒரு நடைபாதை வழியாக சென்றபோது, ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட ஒரு வார்த்தையைக் கண்டார். அங்கு ஆங்கிலத்தில் “இரத்த வங்கி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியை ஆராய்ந்த அவர், ஒரு நிலத்தடி மருத்துவமனை கண்டுபிடித்ததாக கூறியிருக்கிறார்.
அந்த வீடியோவில் மருத்துவமனையின் பல அறைகள், அங்கு சிதறி கிடக்கும் பொருள்கள், முன்பு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றை தனது கைகளில் வைத்திருக்கும் விளக்கு கொண்டு காண்பிக்கின்றார்.
இந்த வீடியோ 18 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்த வீடியோவிற்கு பயனர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சாக்கடைக்கு அடியில் இப்படி ஒரு வித்தியாசமான இடத்தை கண்டுபிடித்ததாக அவர் கூறியது பலரையும் ஆச்சரியத்திலும் சந்தேகத்திலும் ஆழ்த்தியுள்ளது.