
உலகின் மிகச் சிறிய நாடு என்று சொன்னால் உடனே பலருக்கும் வாடிகன் சிட்டி தான் நினைவிற்கு வரும். ஆனால் வாடிகன் சிட்டியை விட சிறிய நாடு ஒன்று உள்ளது என்பது பலருக்கும் தெரியாது!
நடுக்கடலில் அமைந்திருக்கும் இந்த நாடு குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இங்கிலாந்தின் சஃபோல்க் கடற்கரையிலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு மைக்ரோ நேஷனாக இருப்பது தான் சீலாண்ட். இந்த நாட்டின் மக்கள் தொகை வெறும் 27 பேர் தான் என கூறப்படுகிறது.
1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் படைகளிடமிருந்து தங்களை காப்பாற்றுவதற்காக இங்கிலாந்தால் ஒரு தளம் கட்டப்பட்டது.
இந்த தளம் தான் ஒரு நாடாக உருவாகியுள்ளது. ஆம் படித்தது சரிதான்! 1967ஆம் ஆண்டு இங்கிலாந்தில் முன்னாள் ராணுவ வீரர் ராய் பேட்ஸ் என்பவர் ஒரு ரேடியோவை தொடங்க நினைத்தார்.
ஆனால் அங்கு பிபிசி தவிர மற்றொரு ரேடியோவை தொடங்குவது சட்டவிரோதமாக பார்க்கப்பட்டதால், இந்த கடலின் நடுவே இருக்கும் ராணுவ தளத்திற்கு வந்தார் ராய் பேட்ஸ்.
ஒரு ரேடியோ ஸ்டேஷனுக்கு பதிலாக ஒரு நாட்டையே உருவாக்கினார் ராய் பேட்ஸ். இந்த இடத்திற்கு ”சீலாண்ட்” என பெயர் வைத்து இதனை தனி நாடாக அறிவித்தார்.
இதற்கான தனி பாஸ்போர்ட், ஸ்டாம்ப், கரன்சி, கொடி ஆகியவற்றை உருவாக்கினார். என்னதான் கொடி, கரன்சி, அரசு ஆகியவை இருந்தாலும் சீலாண்ட் இறையாண்மை கொண்ட தனி நாடாக யாராலும் அங்கீகரிக்கப்படவில்லை.
டச்சு ராணுவ அதிகாரிகள், பிரிட்டிஷ் காவல்துறையினர் என பலர் அந்த இடத்தை சோதனை செய்து கைப்பற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
ராய் பேட்ஸின் இரு மகன்கள் தான் சீலாண்ட், நாட்டின் இளவரசர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் நாடு அங்கீகரிக்கப்படும் என்று நினைக்கிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் இந்த பகுதி மீண்டும் கைப்பற்றப்படலாம் அல்லது கடல் சீற்றத்தால் இடிந்து போகலாம்.
இப்படி பல சம்பவங்கள் நடந்திருக்கும் இந்த சீலாண்ட் நாட்டை இன்று சுற்றுலா பயணிகள் சென்று பார்த்து வருகின்றனர்.