
புதுடெல்லி: மத்திய உளவுத் துறை இயக்குநர் தபன் குமார் டேகாவின் பதவிக்காலம் ஜூன் 2026 வரை ஓராண்டுக்கு நீடிக்கும். டேகாவின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளின் மீது இந்தியா துல்லிய தாக்குதல் நடத்திய நிலையில், மாறிவரும் பாதுகாப்பு சூழல்களுக்கு மத்தியில் தபன் குமார் டேகாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தபன் குமார் தேகா (62) இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 1988-ம் ஆண்டு இந்திய காவல் பணி பேட்ச் அதிகாரி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு உளவுத் துறை இயக்குனரகத்தின் தலைவராக இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு அவரின் பணிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.