• May 20, 2025
  • NewsEditor
  • 0

தி மனிதனில் ஒருவன், குகைக்குள் இருந்த தேன் கூட்டில் இருந்தோ அல்லது பாறை இடுக்கில் இருந்த தேன் கூட்டில் இருந்தோ வழிந்த அந்த பொன் நிற திரவத்தை, ஒற்றை விரலால் தொட்டு உள்ளுணர்வின் தூண்டுதலால் தன் நாவில் வைக்கிறான். அதன் இனிப்புச்சுவை அவன் நாவின் சுவை அரும்புகளை மலர வைக்கிறது. ஆதிமனிதன் தேனை சுவைத்தன் மூலமே முதல்முறையாக சுவையை அறிந்தான் என்கிறது மனிதகுல வரலாறு.

பிறகென்ன, மனிதன் தேனைத் தேட ஆரம்பிக்கிறான். தேனின் சுவையை அறிந்த நாம், அதை உற்பத்தி செய்யும் அந்த சின்னஞ்சிறு உயிர்களைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?

தேனீக்கள்

உருவத்தில் ஈ போல, ஈ-யைவிட சிறியதாக, ஒரு குளவிபோல என கிட்டத்தட்ட 20 ஆயிரம் வகைகளுக்கும் மேற்பட்ட தேனீக்கள் உலகில் இருக்கின்றன என்கிற சூழலியல் ஆர்வலர் மற்றும் சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம், உலக தேனீக்கள் தினமான இன்று (மே 20), தேனீக்கள் வாழ்ந்த வாழ்க்கையையும், அவை வீழ்ந்துக்கொண்டிருக்கிற தற்போதைய நிலையையும் இங்கே விவரிக்கவிருக்கிறார். 2018-ம் வருடம் முதல் கொண்டாடப்பட்டு வருகிற தேனீக்கள் தினத்தில், இந்த வருடத்தின் கருப்பொருள் ‘இயற்கையால் ஈர்க்கப்பட்ட தேனீ நம் அனைவரையும் வளர்க்கிறது’ (Bee inspired by nature to nourish us all) என்பதே.

”மனிதன் நினைப்பதுபோல பூக்களில் தேன் இருப்பதில்லை. பூக்களில் இனிப்புச்சுவை கொண்ட ஒரு சொட்டு திரவம் இருக்கும். அந்த ஒரேயொரு சொட்டு இனிப்புதான் தேனீக்களின் உயிர் காக்கும் அமுதம். அதை உண்டு, தன் வயிற்றில் சேகரித்தபடி தன் கூடுகளுக்குத் திரும்பும் தேனீக்கள், அங்கு தன் வயிற்றுக்குள் நொதித்திருக்கிற தேனை, தேன்கூட்டில் சேமித்து வைக்கும். தேன் என்பது தேனீக்களின் நொதி. தேனீக்களின் நொதி எனும்போதே, அது இளம் தேனீக்களுக்கான உணவு என்பது புரிந்திருக்குமே… அதைத்தான் மனிதர்கள் நாம் உணவாக, மருந்தாக சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.

தேனீக்கள்
World Honey Bee day

தேனீக்கள் பேசும் தெரியுமா உங்களுக்கு? ஒரு தேன் கூட்டுக்கு எந்தத் தீதும் செய்யாமல், அதை உற்றுக் கவனித்துப்பாருங்கள். அதன் மொழி உங்கள் கண்களுக்குக் கேட்கும். ‘என்ன, கண்களுக்கா’ என்று ஆச்சரியப்பட்டீர்களென்றால், ‘ஆம்’ என்றுதான் சொல்வேன். தேனீக்கள் ஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட 460 முறை தம் சிறிய சிறகுகளை அசைக்கும். அப்போது எழுகிற ஒலியையே நாம் தேனீக்களின் ரீங்காரம் என்போம். சிறகுகளின் அசைவை சூழலியலாளர்கள் ‘தேனீக்களின் நடனம்’ என்போம். அந்த நடனம்தான் தேனீக்களின் மொழி.

தேன் கூட்டில் இருக்கிற உழைப்பாளித் தேனீக்கள், ராணித்தேனீக்காகவும் பிஞ்சு தேனீக்களுக்காகவும் தேன் சேகரிக்க செல்கையில், ஓரிடத்தில் மலர்கள் நிறைந்திருப்பதைக் கண்டுகொண்டால், மற்ற உழைப்பாளிகளுக்கும் அதை தெரிவித்து விடும். கண்டதை மறைக்கிற சூது வாது எல்லாம் தேனீக்களுக்குத் தெரியாது. சரி தகவலை எப்படித் தெரிவிக்கும்?

தன் சிறகசைவின் வழியே, ‘நம் தேன்கூட்டுக்கு இவ்வளவு தூரத்தில் பூக்கள் நிறைந்திருக்கின்றன; சூரியன் உதிக்கிற திசையில் பூக்கள் இருக்கின்றன; சூரியன் உதிக்கிற திசைக்கு எதிர்த்திசையில் நமக்கான உணவு இருக்கிறது. வாருங்கள் நாம் அனைவரும் அங்கு செல்வோம்’ என தன் தோழமைகளுக்கு தெரிவித்துவிடும். இவையெல்லாம் தேனீக்கள் குறித்த ஆய்வுகள் நமக்கு சொல்கிற சுவாரஸ்யமான தகவல்கள்.

தேனீக்கள்
தேனீக்கள்

தற்போது காலாவதி தேதியுடன் வருகின்றன தேன் பாட்டில்கள். ஆனால், தேனீக்கள் சேகரித்த தேனுக்கு ஆயுள் கெட்டி. அதற்குக் காரணம், அவற்றின் சின்னஞ்சிறு சிறகுகள்தான். அந்த சிறகுகள் அசைவதன் மூலம் தேனில் இருக்கிற நீர்த்தன்மை நீங்கும். நொதித்தல் மூலம் அதில் அதிகபட்சமான இனிப்பை சேர்ப்பதன் மூலமும், தேனில் இருக்கிற நுண்ணுயிர்கள் மற்ற நுண்கிருமிகளால் தொற்று ஏற்படாமல் தடுப்பதன் மூலமும் தேன் நீண்ட காலம் கெடாமல் இருக்கும்.

எல்லாம் நலமாகத்தான் சென்றுகொண்டிருந்தது, அரை நூற்றாண்டுக்கு முன்புவரை. மனிதன் இயற்கை விவசாயத்தை விட்டுத் தள்ளி நிற்க ஆரம்பித்தான். பயிர்களைக் காக்க பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க ஆரம்பிக்க, அந்தச் சின்ன உயிர்களின் வாழ்க்கைத் தடுமாற ஆரம்பித்தது. மரபணு மாற்றப்பட்டப் பயிர்களில் மகரந்த சேர்க்கை செய்ய அமர்கிற தேனீக்கள், இரண்டு விதமான பிரச்னைகளை சந்திப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

பூக்களில் இருக்கிற ஒரு சொட்டு இனிப்பை உண்டு, தன் வயிற்றுக்குள் நொதிக்க வைத்து தேனாக சேமித்த தேனீக்கள், வழக்கம்போல மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருக்கிற ஒரு சொட்டு இனிப்பை உறிஞ்சி தன் வயிற்றுக்குள் அனுப்ப, அதற்கு பழக்கப்படாத அதன் செரிமான மண்டலத்தில் கோளாறுகள் வர ஆரம்பித்தன. உணவே விஷமாக ஆரம்பித்தது எனலாம் அதை. இது முதல் பிரச்னை.

இரண்டாவது பிரச்னை மறதி. ‘தான் எங்கிருந்து வந்தேன். தன் கூடு எங்கிருக்கிறது’ என்பதை மறந்து எங்கெங்கோ சுற்றி, தனிமையில் எங்கோ முட்டிமோதி இறந்தே விடுகின்றன.

தேனீக்கள்
தேனீக்கள்

சமீபத்திய ஆய்வு ஒன்று தேனீக்களின் இன்னொரு பரிதாப நிலையையும் மனித குலத்தின் தலையில் அடிப்பதுபோல தெரிவித்திருக்கிறது. வாழ்நாளில் சுமார் 14 லட்சம் சதுர கி.மீட்டர் வரை பறந்து… கிட்டத்தட்ட 20 லட்சம் பூக்கள் வரைக்கும் மகரந்தச்சேர்க்கை செய்து… பூக்கள் காயாகி, பழமாகி, அதன் விதைகள் மண்ணுக்குள் இருந்து மீண்டும் மரமாகி என பசுமைச்சுழற்சியின் வளையத்தில் இன்றியமையாத உயிராக இருந்த தேனீக்கள்; நம் தட்டில் இருக்கிற 80 சதவிகித உணவுக்குக் காரணமான தேனீக்கள்; உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவை உற்பத்தி செய்வதில் பெரும் பங்காற்றிய தேனீக்கள், நம்முடைய எச்சில் கோப்பைக்குள் விழுந்து இறக்க ஆரம்பித்தன.

ஆம், டீ, காபியில் ஆரம்பித்து பழச்சாறு, பாயசம் ஆகியவற்றை அருந்திவிட்டு, நாம் குப்பையில் விட்டெறிகிற கோப்பைகளில் தன் உணவை தேட ஆரம்பிக்கிற அந்த உயிர்கள், அதில் விழுந்து இறந்து விடுகின்றனவாம். கடந்த 30 வருடங்களாக தேனீக்கள் தொடர்பாக நடத்தப்பட்ட பல ஆய்வுகளும், உலகமெங்கும் தேனீக்கள் குறைந்து வருவதாக வருந்திக் கொண்டிருக்கின்றன.

இந்த உலகத்தில் தேனீக்கள் முற்றிலும் அழிந்தால், மகரந்தச்சேர்க்கை குறைவுபட்டு, உணவு உற்பத்திக்குறைந்து, மனித குலம் பசியாலேயே இறந்துவிடும் என்று விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்னதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். ஊருக்கெல்லாம் சோறு போட்ட கிழவி, இறந்துபோனால் அவளை நம்பிய மக்கள் எல்லாம் மடிந்துபோவதைப்போல, தேனீக்கள் மடிந்தால் மனித குலமும் அற்றுப்போகும்” என்கிறார் கோவை சதாசிவம்.

கோவை சதாசிவம்
கோவை சதாசிவம்

அந்த சின்னஞ்சிறு உயிர்கள் வாழ்வதற்கான இயற்கைச் சூழலுக்கு முடிந்தவரை திரும்புவோம். நம் பிள்ளைகளுக்கு இந்தப் பூமியை வாழ்வதற்கு ஏற்றபடி விட்டுச் செல்வோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *