
திருவண்ணாமலையைச் சேர்ந்த எழுத்தாளரான குமார், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவருடனேயே சில காலங்கள் பயணித்தார். அந்த காலகட்டங்களில் இயற்கை வேளாண்மை, நிரந்தர வேளாண்மை, மழை நீர் சேகரிப்பு, இயற்கை வேளாண் பண்ணை அமைப்பு போன்றவற்றை கற்றுக் கொண்டு, வானகத்திலேயே பயிற்சியாளராக இருந்தார்.
நாம் வாழும் சூழலுக்கு ஏற்பதான கட்டடங்களை அமைக்க வேண்டும் என்பதை அவதானித்து, அதற்கேற்ப மரபு சார்ந்த கட்டடங்களை உருவாக்க ஆரம்பித்தார். அதன் பிறகு இயற்கை வேளாண் பண்ணை அமைப்பு, மரபு சார் கட்டடங்கள் அமைப்பு போன்றவற்றை தொழில்முறையாகவும் செய்து வந்தவர், இயற்கை, காடுகள் போன்றவற்றிற்கு எதிரான போராட்டங்களில் சமரசமின்றி தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்பட்டபோது, `இவர்கள் வெட்ட நினைப்பது மரங்களை அல்ல. பல்லுயிரினங்களின் வசிப்பிடமான இயற்கை வனத்தை. அதை அனுமதிக்க முடியாது’ என்று கூறி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக களத்தில் முழங்கியவர். மரபு சார்ந்த கட்டடங்களை கட்டும்போது, அவற்றின் சுவர் வலிமையாக இருப்பதற்கு செங்கற்கள், கடுக்காய், சுண்ணாம்பு, வெல்லம் போன்றவற்றை பயன்படுத்தினார்.
மரபு சார்ந்து கட்டப்படும் இப்படியான சுவர்களில் விரிசல் ஏற்படும்போது, களிமண், புற்று மண், மாட்டுச் சாணம் உள்ளிட்டவற்றைக் கொண்டு சரி செய்யலாம் என்பார். வானகத்தில் நம்மாழ்வார் தன்னுடைய இறுதிக் காலம் வரை வாழ்ந்த குடில், இவருடைய கட்டுமானத்தில் உருவானது.
இசையின் மீது தீராத தாகத்தைக் கொண்ட அம்பாயிரம், ஆஸ்திரேலிய பூர்வகுடிகளான அபார்ஜின்களின் இசைக் கருவியான டிஜிரிடூ (Didgeridoo)- வை நம் ஊரின் மூங்கில் மரத்தில் உருவாக்கி, தனக்கென ஒரு இசை மொழியை தேர்வு செய்தார். கலை இலக்கிய இரவு மேடைகளில் அந்த கருவியில் ஆஸ்திரேலிய பூர்வகுடிகளின் இசையை வாசிக்கும்போது, அபார்ஜின்களாகவே மாறியிருப்பார் அம்பாயிரம்.
அந்த இசையை கேட்பவர்கள் யாராக இருந்தாலும், அன்றிலிருந்து அம்பாயிரத்தின் நட்புப் பட்டியலில் இணைந்து விடுவார்கள். `வாழ்க்கையில் முரண்கள் உண்டு. உள்ளும் புரமுமான முரண்களை கடக்கும்போது நாம் இயற்கையாக மாறிவிடுகிறோம். அனைத்து மனிதர்களுக்குள்ளும் ஒரு லயம் உண்டு. அது இயற்கைக்குள்ளும் இருக்கிறது. இசையின் வழியாக அந்தத் தாள லயத்துடன் நாம் இணைய முடியும்’ என்பார் அம்பாயிரம்.

பள்ளிப்படிப்பின் இறுதி வரை செல்லாத அம்பாயிரத்தை, புனைவு சிறுகதை எழுத்தாளராக, கவிஞராக நிலைநிறுத்திக் கொண்டது தமிழ் இலக்கிய வெளி. எஸ்.ராமகிருஷ்ணன், பவா செல்லத்துறை
போன்ற பல முன்னணி எழுத்தாளர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பிடித்தன அம்பாயிரத்தின் எழுத்துகள்.
ஈட்டி என்ற இவரின் சிறுகதை தொகுப்பு, புனைவு கதைகளின் அடையாளம். சமீபகாலமாக கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அம்பாயிரம், அதற்காக சிகிச்சைகள் எடுத்துக் கொண்டிருந்தார். நேற்று இரவு காய்ச்சல் என்று மருந்துகளை உட்கொண்டு உறங்கச் சென்றவர், அதன்பிறகு மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டார்.