
புதுடெல்லி: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹரியானா யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவிடம் தேசிய புலனாய்வு அமைப்பு, புலனாய்வுப் பிரிவு மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதியின் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் பயண விவரங்கள் குறித்தும் அதிதீவிர விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'டிராவல் வித் ஜோ' என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த ஹிசாரைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா (33), பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மே 16 அன்று கைது செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் மற்றும் பிஎன்எஸ்-ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கடந்த இரண்டு வாரங்களாக பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இருந்து கைது செய்யப்பட்ட 12 பேரில் ஜோதியும் ஒருவர். வட இந்தியாவில் செயல்படும் பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வலையமைப்பை புலனாய்வு ஏஜென்சிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.