• May 20, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளித்து தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (20.05.2025) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி புதுச்சேரியில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி அரசு

அதனால் கொரோனா தொற்றின் அறிகுறிகளான சளி, இருமல், ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், உடனே அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையங்களில் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். புதுச்சேரியில் தற்போது பரவி வரும் சளி, ஜலதோஷம் ILI (Influenza-like Illnesses), SARI (severe acute respiratory infections) போன்றவற்றை புதுச்சேரி சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தொற்று பரவாமல் தடுக்கவும் கீழ்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்க சுகாதாரத்துறை வலியுறுத்துகிறது.

செய்ய வேண்டியவை:

>  நீங்கள் இருமும்போது கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் உங்கள் வாய்  மற்றும் மூக்கினை அழுத்தி மூடவும்.

>  சோப்பு, தண்ணீர் மற்றும் ஆல்கஹால் கலந்த சானிடைசரில் உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவும்.

>  கூட்டம் மற்றும் நெரிசலான இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கவும்.

>  உங்களுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்டவை இருந்தால் பொது இடங்களில் இருந்து விலகி இருக்கவும்.

> நல்ல காற்றோட்டமான பகுதிகளில் இருக்குமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொள்கிறது.

>  உங்களுக்கு சளி, காய்ச்சல், ஜலதோஷம் போன்றவை இருந்தால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து விலகி, வீட்டிலேயே இருங்கள்.

>  சத்தான உணவை சாப்பிடுவதுடன், நிறைய தண்ணீரையும் குடிக்கவும்.

கொரோனா

செய்யக் கூடாதவை:

>  பயன்படுத்திய டிஷ்யூ பேப்பர்கள் மற்றும் கைக்குட்டைகளை மறுபடியும் பயன்படுத்தாதீர்கள்.

>  சளி, ஜலதோஷம் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கி இருப்பதை தவிர்ப்பதுடன், அவர்கள் பயன்படுத்திய துண்டு போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள்.

>  கண்கள், மூக்கு மற்றும் வாயை அடிக்கடி தொடுதல் கூடாது.

>  பொது இடங்களில் எச்சில் துப்புவதை கண்டிப்பாக செய்யக் கூடாது.

>  மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் உட்கொள்ளக் கூடாது.

`பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்…’

புதுச்சேரியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நான்கு படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல கோரிமேடு அரசு மார்பு நோய் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வசதியுடன் ஆறு படுக்கைகளுடன் கொண்ட வார்டு தயார் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது பரவி வரும் கொரோனா தொற்று குறித்து தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்திய அரசுடன் இணைந்து, புதுச்சேரி சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது. அதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *