
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கோவையில் கட்சிப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வலுவாக உள்ளது. கள அரசியலில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது.
தமிழக துணைவேந்தர்கள், தமிழக கவர்னர் முகாமில் அதிமுக பெரிய வாக்கு வங்கி வைத்துள்ளது. இதை மறுக்க முடியாது. ஆனால் அதிமுக பாஜக-வுடன் கூட்டணி வைத்திருப்பதை அதிமுக-வின் கடைமட்ட தொண்டர்கள் விரும்பவில்லை.
தவெக தேர்தலில் எந்தளவு வாக்கு பெறும் என்று தெரியவில்லை. அரசியல் கட்சி என்றால் அனைத்து பிரச்னைகளிலும் கருத்து கூற வேண்டும். அவர்கள் தனித்து நிற்பார்களா அல்லது என்ன முடிவு என்று தெரியவில்லை. கட்சிக்கு கட்டமைப்பு மிகவும் முக்கியம். காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டுவதில் தவறில்லை.

அனைத்து கட்சிகளுமே அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். தமிழகத்தில் 1967-ம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி அவ்வாறு இல்லை. இதில் எனக்கு வருத்தம் தான்.
ஆனாலும் தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது. தமிழக கவர்னர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றம் பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து இந்திய ஜனாதிபதி எழுதியிருக்கும் கடிதத்துக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. இதில் தமிழக முதலமைச்சர், பிற மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.” என்றார்.