
தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் சிறப்பு தூர் வாரும் பணிகளை கண்காணிக்க இதுவரை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்படாததால், இந்தப் பணிகள் பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்று வருவதாக ஆதங்கம் தெரிவிக்கும் விவசாயிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களின் பழைய அகலத்தை குறைக்காமல் தூர் வார வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். அதற்கு முன்னதாக ஆறு, வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவற்றை தூர் வாருவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சிறப்பு தூர் வாரும் பணிகளை அறிவித்து, அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. அதன்படி, நிகழாண்டு காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் ஆறு, வாய்க்கால்கள் தூர் வாரும் பணிக்காக தமிழக அரசு ரூ.114 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.