• May 20, 2025
  • NewsEditor
  • 0

இந்திய வீடுகளில், அதுவும் நடுத்தர வீடுகளில், தங்க நகைகளை ஆசைக்கு வாங்குவதை விட, அவசரத் தேவைகளுக்கு அடமானம் வைத்துக் கொள்ளலாம் என்று வாங்குவது தான் அதிகம்.

பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றைத் தெரியாத, செய்யாத வீடுகளுக்கு தங்கம் தான் ‘முதலீடு’.

இந்த நிலையில், தங்க நகைக் கடனில் புதிய கட்டுப்பாடுகளை முன்வைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. இது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விதிமுறைகளின் விளக்கம், இது வாடிக்கையாளர்களுக்கு சாதகமானதா… இல்லையா என்பதை விளக்குகிறார் முன்னாள் வங்கியாளர் மற்றும் செபி ஸ்மார்ட் பயிற்சியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்.

முன்னாள் வங்கியாளர் மற்றும் செபி ஸ்மார்ட் பயிற்சியாளர் மோகன்குமார் ராமகிருஷ்ணன்

இந்தக் கட்டுப்பாடுகளுக்கான அடிப்படை என்ன?

“2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சுற்றறிக்கை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. அதில், ‘கடன்கள் வழங்கப்படுவதில் சில முறைகேடுகள் நடக்கின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.

‘கடனில் முறைகேடுகளா?’ என்ற கேள்வி எழலாம். உதாரணத்திற்கு, விவசாயக் கடன்களுக்கு வட்டி விகிதம் ஒப்பீட்டளவில் குறைவு. அதனால், விவசாயி அல்லாதவர்கள் கூட, விவசாயக் கடன் வாங்குகின்றனர். ஆனால், அந்தக் கடனின் நோக்கமான விவசாயத்திற்கு அந்தக் கடன் தொகை பயன்படுவதில்லை.

நகைக் கடன்களை எடுத்துக் கொண்டால், கடன் காலத்திற்குப் பிறகு, தங்க நகையை அசலும் வட்டியும் செலுத்தி மீட்க வேண்டும். ஆனால், வாடிக்கையாளர்களோ அசலைக் கட்டாமல், கடன் கால இறுதியில் வட்டியை மட்டும் மீண்டும் மீண்டும் கட்டி, நகைகளை மறு அடமானம் வைத்து விடுகின்றனர்.

இதனால், அவர்களுக்கு நகையை மீட்க வேண்டும் என்கிற எண்ணமே வருவதில்லை. வங்கிகளும் இதை வைத்து தங்களது தங்கம் ஃபோர்ட்ஃபோலியோ அதிகம் இருப்பது போலக் காட்டுகின்றன. இந்த நிலையில், ஒருவேளை சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தால் வங்கிகளுக்கு இது பெரிய அடியாக மாறும்.

இதையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவரும் விதமாகத் தான் இந்திய ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இப்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தேச வழிகாட்டியில் கூறப்பட்டுள்ளவை என்ன? அதன் தெளிவான விளக்கம்!

தங்க நகை அடமானம்
தங்க நகை அடமானம்

1. அடமானம் வைக்கப்படும் தங்க நகையின் 75 சதவிகித மதிப்பு தான் கடனாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு தங்க நகையின் மதிப்பு ரூ.100 ஆக இருந்தால், இனி அந்த நகைக்கான கடனாக 75 ரூபாய் தான் வழங்கப்படும். கொரோனா பேரிடர் காலத்தில் இருந்து அந்த நகைகளுக்கு 80 ரூபாய் வரை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடனாக வழங்கி வந்தது. அது தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை செலவு மற்றும் வருமானம் சம்பந்தமான இரு வகை கடன்களுக்குமே பொருந்தும். செலவு வகைக் கடன் என்றால் மருத்துவம் போன்ற அவசரத் தேவைக் கடன்கள். வருமான வகைக் கடன்கள் என்றால் முதலீடு செய்ய வாங்கப்படும் கடன்கள்.

தங்க நகை அடமானக் கடனில் புல்லட் ரீபேமென்ட் கடன், இ.எம்.ஐ கடன் என எந்தக் கடனாக இருந்தாலும் தங்க நகை மதிப்பில் 75 சதவிகிதம் தான் கடனாக வழங்கப்படும். புல்லட் ரீபேமென்ட் கடன் என்றால், அசலும் வட்டியும் ஒன்றாக கட்டி முடிப்பது. இ.எம்.ஐ கடன் என்றால் மாதா மாதம் கட்டப்படும் தொகையில் கழியும் அசல் மற்றும் அந்த அசலுக்கேற்ற வட்டியை கட்டுவது ஆகும்.

இதில் புல்லட் பேமென்ட் கடன் வாங்குபவர்களுக்கு சிக்கல் உண்டு. ஒருவர் ரூ.50,000 மதிப்புள்ள நகையை அடமானம் வைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

வங்கி வட்டி
வங்கி வட்டி

அதற்கான 75 சதவிகிதம் கிட்டதட்ட ரூ.37,500. இந்த ரூ.37,500-ல் ஆரம்பத்திலேயே ஒரு மாதத்திற்கான வட்டி விகிதம் குறைத்து கொள்ளப்பட்டு தான் தரப்படும். அதாவது, கடனுக்கான வட்டி விகிதம் 10 சதவிகிதம் என்றால், கடன் கொடுக்கப்படும் போது 10 சதவிகித வட்டி தொகையான ரூ.1,952 கழிக்கப்பட்டு கிட்டதட்ட ரூ.35,500 தான் தருவார்கள்.

ஆனால், இ.எம்.ஐ கடனில் தங்க நகையின் மதிப்பான 75 சதவிகிதம் அப்படியே தரப்படும்.

ஒரு கிலோ தங்கம்…

2. அடமானம் வைக்கும் நகை தங்களுடையது தான் என்பதைக் காட்ட பில் ஒரு ஆதாரம். ஆனால், அதைப் பத்திரமாக வைத்திருப்போம் என்று கூறமுடியாது. அதனால், நகைகளுக்கான டிக்ளரேஷன் சான்றிதழை நகைக் கடைகளில் இருந்து வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

3. நகைக்கான தர சரிபார்ப்பு என்பது இப்போதும் நடக்கும் வழக்கம் தான்.

4. தனிநபர் 1 கிலோ தங்கம் வரையில் தான் அடமானம் வைக்க முடியும். ஒருவேளை, தங்க நாணயங்களாக அடமானம் வைக்கிறார்கள் என்றால், 50 கிராம் வரையிலும் அடமானம் வைக்கலாம்.

5. 999 தரத்திலான வெள்ளி நகைகளை அடமானம் வைக்க முடியும்.

6. தங்க ஆபரணங்களுக்கு மட்டுமே கடன்கள் வழங்கப்பட வேண்டும். ஆபரணம் அல்லாத தங்கக் கட்டிகளுக்கு கடன் வழங்கப்பட மாட்டாது.

gold - தங்கம்
gold – தங்கம்

18 கிராம் தங்க அடமானத்தில் நடப்பது என்ன?

7. தங்க நகைக் கடனைத் திருப்பி செலுத்திய 7 வேலை நாள்களில் வங்கி அல்லது நிதி நிறுவனம் அடகு வைக்கப்பட்ட நகைகளைத் திருப்பி தந்துவிட வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000-த்தை கடன் வழங்கிய நிறுவனம் வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டும்.

8. ஏலத்திற்கு நகைகளைக் கொண்டுப்போகும் போது, எழுத்துப் பூர்வமாக அது குறித்து வாடிக்கையாளருக்கு கட்டாயம் தெரிவித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் வாடிக்கையாளர்கள் வங்கி மீது வழக்கு தொடுக்க முடியும்.

9. ஒருவர் 18 கேரட் தங்க நகையை அடமானம் வைக்கிறார்கள் என்றாலும், அந்த நகையின் தரத்தை 22 கேரட்டாக கருத வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 18 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,000 என்று வைத்துக் கொள்வோம். அப்போது 18 கேரட் 10 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.70,000.

22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,500 என்று வைத்துக் கொள்வோம்.

மேலே கூறிய ரூ.70,000-த்தை, 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலையோடு வகுப்பார்கள். அப்போது 8.2 கிராம் தங்கம் என தான் கணக்கிப்படும். இந்த 8.2 கிராம் தங்க மதிப்பில் 75 சதவிகிதம் தான் கடனாக வழங்கப்படும். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு சில வங்கிகளில் தான் 18 கேரட் தங்க நகை அடமானமாகப் பெற்று கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்னும் ஒன்று…

வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து மாதா மாதம் கடனுக்கான அசலையும் வட்டியையும் எடுத்துகொள்ளலாம் என்று வாடிக்கையாளர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம். கடன் தொகையை முழுவதுமாக அப்படி கட்டியான பிறகு, 2 – 3 ஆண்டுகளுக்குள் தங்க நகைகளை வாடிக்கையாளர்கள் மீட்டுக் கொள்ள வேண்டும்.

வாடிக்கையாளர்கள் அதைச் செய்யவில்லை என்றால் வங்கி அல்லது நிதி நிறுவனம் வாடிக்கையாளரின் வாரிசுத்தாரரை கட்டாயம் அணுக வேண்டும். அப்படி கிளெய்ம் செய்யப்படாத தங்க நகைகளின் தகவல்களை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் தெரிவிக்க வேண்டும்.

சாதகங்கள் என்ன?

  • பெரும்பாலும் இப்போது வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து கடனை வாங்கிவிடுகிறார்கள். ஆனால், அதை மீட்பதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. வட்டியை மட்டும் திரும்பத் திரும்பச் செலுத்தி மறு அடகு வைத்து வருகிறார்கள். ஆனால், இந்தப் புதிய கட்டுப்பாடுகள் மூலம் தங்கத்தை கடன் காலத்தின் முடிவில் மீட்பதிற்கான் நிதித் திட்டமிடலை செய்வார்கள்… அவர்களுக்கு நிதி ஒழுக்கம் வரும்.

  • கடன் தொகையை முழுவதுமாக வாடிக்கையாளர்கள் கட்டி முடித்தப் பிறகு இனி வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அலைக்கழிக்க முடியாது. அந்த நகைகளை ஏழு வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளர்களிடம் திரும்ப தந்துவிட வேண்டும்.

  • அப்படிக் கொடுக்கும்போது, நகையில் எதாவது சேதாரம் ஏற்பட்டிருந்தால் வங்கி அதற்கான கட்டணத்தை வாடிக்கையாளருக்கு தந்துவிட வேண்டும்.

  • ஏலத்தின் போது, வாடிக்கையாளருக்கு எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

gold - தங்கம்
gold – தங்கம்

பாதகங்கள் என்ன?

  • மறு அடமானத்தைத் தடை செய்ததால் மக்கள் கந்து வட்டிக்காரர்களிடம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

  • தங்கம் நகை மதிப்பில் 75 சதவிகிதம் மட்டுமே கொடுப்பார்கள் என்பதால் மக்கள் அதிக நகைகளை அடமானம் வைப்பது போல ஆகிவிடும்.

  • பெரும்பாலும், வரலாற்றில் தங்கத்தின் விலை ஏறுமுகமாகத்தான் இருந்துள்ளது. இந்த நிலையில், மக்களுக்கு 75 சதவிகிதம் மட்டுமே கடனாகக் கிடைப்பது, அவர்களுக்கு நஷ்டமாக அமையும்.

  • புல்லட் லோன்களில் தங்கம் கடன் இன்னும் குறைவாக கிடைக்கும்.

  • இந்தப் புதிய கட்டுப்பாடுகள் மக்கள் தங்க நகை அடமானக் கடனை பெறும் நடவடிக்கையை இன்னும் கடினமாக்குகிறது”.

இந்த புதிய விதிமுறைகள் குறித்த உங்களின் கருத்துகளை கீழே கமெண்டில் தெரிவியுங்கள் மக்களே…!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *