
புதுக்கோட்டை: பசு மாடுகள் கர்ப்பம் தரித்து 8 மாதங்களைக் கடந்ததும், சில நேரங்களில் சத்து குறைபாடு காரணமாக படுக்கையைவிட்டு எழ முடிவதில்லை. இதனால், 2 பின்னங்கால்களையும் மடக்கி வைத்துக் கொண்டு தவளைபோல மாறி விடுகின்றன. இந்த நோயால் பாதிக்கப்படும் பசு மாடுகள் பெரும்பாலும் அதிலிருந்து மீள்வதில்லை. தற்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக இத்தகைய பாதிப்பு இருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி செல்வம் கூறியது: கன்றுக் குட்டியில் இருந்தே பசுவை ஆரோக்கியமாக பராமரித்து வருகிறோம். சினை பிடித்த பிறகு மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லுதல், தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட உலர் தீவனம், பசுந்தீவனம் கொடுத்து வந்தாலும், 7 அல்லது 8-வது மாதத்தில் படுத்த மாடு மீண்டும் எழுவதில்லை.