• May 20, 2025
  • NewsEditor
  • 0

ஒலியைப் பற்றிய சமீபத்திய ஆய்வில் சத்தத்தைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்க முடியும் எனக் கண்டறிந்துள்ளனர்.

ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் கன்சாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சத்தத்தை உடலில் பயன்படுத்தும் ஆர்வமூட்டும் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். இதன் முடிவுகள் Communications Biology என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.

இதன்படி, சில குறிப்பிட்ட ஒலி அலைகள் செல்களுக்குள் உள்ள மரபணுக்களை நேரடியாக மாற்றியமைத்து, கொழுப்பைக் குறைக்க உதவும்.

ஒலி என்பது அடிப்படையில் காற்று, நீர் மட்டுமல்லாமல் திசுக்கள் வழியாகவும் அதிர்வுறும் இயந்திர ஆற்றலாகும். ஒலியின் தன்மையால் கொழுப்பு செல்கள் உருவாக்கம் உள்ளிட்ட உயிரியல் செயல்முறைகளை மாற்ற முடியும் என அறிவியளாலர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு உயிரி-அறிவியலில் ஒலியியலைப் பயன்படுத்தும் பல வழிகளைத் திறந்துள்ளது.

Sound Waves

“ஒலி அலைகள் உடலில் உள்ள செல்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராய்வதன் மூலம் ஒலியின் உயிரியல் முக்கியத்துவத்தை அரிய முயன்றோம். இது நமது வாழ்க்கைக்கும் சத்தங்களுக்கும் உள்ள உறவைப் பற்றி தெளிவாக விளக்குகிறது.” ஆராய்ச்சியாளர்கள் மசாஹிரோ குமேட்டா மற்றும் அவருடன் ஆய்வை மேற்கொண்ட குழு தெரிவித்துள்ளது.

ஒலியியல் உடலில் மரபணு அளவில் பாதிக்கிறதா என்பதைக் கண்டறிய முயன்று, ஆம் என்ற விடையையும் பெற்றுள்ளதாகக் கூறுகின்றன.

ஆராய்ச்சியை மேற்கொண்டது எப்படி?

ஆராய்ச்சியாளர்கள் அவர்களது சிந்தனையைச் சோதிக்க, எலியின் தசையில் இருந்து பெறப்பட்ட செல்களை பண்படுத்தி, அவற்றை மூன்று வித்தியாசமான ஒலி அலை வடிவங்கள் தாக்கும்படி செய்தனர்.

1. வெள்ளை இரைச்சல் ( white noise – நிலையான பின்னணி சீறல்)

2. 440 ஹெர்ட்ஸ் ஒலி (பியானோவில் இருந்து வரும் சத்தத்தைப் போன்றது)

3. 14 kHz ஒலி (மனித கேட்கும் வரம்பின் எல்லை)

Sound Therapy
Sound Therapy

இயற்கையில் எங்கும் நிறைந்திருக்கும் இயற்பியல் கூறுகளில் ஒன்று ஒலி. அது ஊசலாடும் ஏற்ற இறக்கமான அழுத்தத்தை பொருட்களின் வழியாக கடத்துகிற, ஒரு சுருக்கப்பட்ட இயந்திர அலை என்பதை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆராய்ச்சியின்போது, 2 மணிநேரத்திலேயே செல்களில் உள்ள 43 ஜீன்களின் வெளிப்பாட்டில் மாற்றம் காணப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் 143 ஜீன்களில் மாற்றம் காணப்பட்டுள்ளது. இதனை RNA-வரிசைமுறை (RNA-seq) என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டறிந்துள்ளனர்.

மிக முக்கியமாக கொழுப்பு செல்கள் முதிர்வடைந்து முழு அளவில் கொழுப்பை சேமிக்கும் நிலைக்கு மாற்றமடைவதை ஒலி அலைகள் தடுப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் ஒலிகள் செல்லுலார் தூண்டிகளும் கூட என்ற புதிய வரையறையை உருவாக்கியுள்ளனர்.

மேலும், 440 ஹெர்ட்ஸ் ஒலிதான் அதிக அளவில் செல்களைத் தூண்டுவதாகவும் தெரிவித்துள்ளனர். 14 kHz ஒலி கிட்டத்தட்ட இதற்கு இணையான அளவில் பாதிக்கிறது.

 இந்த ஆய்வு எலிகளை மையப்படுத்தியே நடத்தப்பட்டுள்ளதால், இது ஆய்வகத்துக்கு வெளியில் எவ்வாறு செயல்படும் என்பதைக் கண்டறிய மேலும் ஆய்வுகள் தேவை எனக் கூறியுள்ளனர்.

இன்று மருத்துவத்தில் நாள்பட்ட வலி, விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் மென்மையான திசு காயங்களுக்கு ஒலி அலை சிகிச்சை பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் உடல் எடையைக் குறைக்க ஒலியை பயன்படுத்த முடியலாம் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *