
‘ஆதவ் அர்ஜூனா பத்திரிகையாளர் சந்திப்பு!’
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா அக்கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார்.
அந்த சந்திப்பில் ஆதவ் அர்ஜூனா பேசியவை, ‘வக்பு சட்டத்திருந்த மசோதாவுக்கு எதிராகத் தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்றோம். ஆனால், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிராக வழக்கு தொடரவில்லை. கேரள சிஐஏக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதே மாதிரி தமிழக அரசும் வக்பு திருத்தச் சட்டத்துக்காக வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்.
இதை திருமாவளவனும் கம்யூனிஸ்ட்களும் தமிழக அரசுக்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டும். இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையின மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேறும் வகையிலான திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு, அரசியலமைப்புச் சட்டத்துடன் சம்பந்தப்பட்டது.

தனிமனிதர்கள் வழக்கு தொடுத்தால் அரசியல் லாபங்கள் இருக்குமோ என நீதித்துறை கருதக்கூடும். ஆனால், அரசு சார்பில் வழக்குத் தொடுக்கும் போது இன்னும் வலுவான வாதங்களை முன் வைக்க முடியும். வலுவாக போராட முடியும். ஆர்ப்பாட்டம் செய்யலாம், மீடியா முன்பாக பேசலாம். ஆனால், தீர்வு என்ன? திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் வக்பு சட்டத்திருத்ததுக்கு எதிராக பேசியதை வரவேற்கிறோம். ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதே தீர்வு.
சிபிஐ விசாரித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய வழக்கில் திமுகவுக்கு என்ன பங்களிப்பு இருக்கிறது? ஆனால், நாங்கள்தான் காரணம் என விளம்பரம் மட்டுமே செய்துகொள்கிறார்கள். அண்ணா யுனிவர்சிட்டி விவகாரத்தின்போது உதயநிதி 15 நாட்களுக்கு ஆளே காணவில்லை. எதாவது பிரச்னையென்றால் மும்மொழிக் கொள்கை மாதிரியான விஷயங்களைக் கையிலெடுத்து பிரச்னையை மடைமாற்றி விடுவார்கள்.

திருமாவளவனை நாங்கள் தாக்கவில்லை. திருமாவளவன் வேங்கை வயலுக்கு சென்றார். மக்களை சந்தித்தார். அந்த விவகாரத்தின்போது இந்த அரசை திருமாவளவன் நம்பினார். ஆனால், இந்த அரசு வேங்கைவயலில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியை ஏற்படுத்தியது. திருமாவளவன் அண்ணன் மீண்டும் வேங்கைவயலுக்குச் செல்ல நினைக்கும்போது உளவுத்துறை மூலம் அவரை செல்லவிடவில்லை. இதைத்தான் நாங்கள் கேள்வி கேட்டோம்.
திமுக சமூகநீதிக்கான அரசு என திருமாவளவன் பேசுவதை நிறுத்த வேண்டும். காவல்துறையின் தோல்வியால் சாதிய மோதல்கள் உண்டாகிறது எனில் அரசியல் தலைமையைத்தான் கேள்வி கேட்க வேண்டும். தலைவர் விஜய்யுடன் பேசி வழிகாட்டுதலின்படிதான் நாங்கள் பேசுகிறோம். அரசியல் எதிரி திமுகவோடும் கொள்கை எதிரி பாஜகவோடும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அதிமுக பாஜகவுடன் சேர்ந்தவுடனேயே அது தவறு என நாங்கள் அறிக்கை கொடுத்துவிட்டோம். மக்களே அதிமுகவுக்கு தண்டனை கொடுத்துவிட்டார்கள். அப்படிப்பட்டவர்களை நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்? ஊழலை மறைப்பதற்காக சமூகநீதியையும் பாஜக எதிர்ப்பையும் திமுக பேசுகிறது. `அடங்க மறு’, `திமிறி எழு’ என்கிற திருமாவளவன் அண்ணனைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். வன்னியர்களுக்கான மாநாட்டுக்கு அனுமதி கொடுக்கும்போது தலித்துகளுக்கான ஆர்ப்பாட்டம் செய்ய ஏன் அனுமதி கொடுப்பதில்லை?

திமுகவை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. கம்யூனிஸ்ட் கட்சிகளே தங்களின் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் சென்றே அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது. கூட்டணி கட்சிக்கே இதுதான் நிலைமை. திமுகவுடன் உளவுத்துறைதான் விஜய் எங்கே செல்கிறார் என்பதை லீக் செய்கிறது.
கோவையில், நாங்கள் ரோடு ஷோவுக்குத் திட்டமிடவில்லை. உள்ளுர் போலீஸ்தான் விஜய்யை வேன் மீது ஏறி நின்று செல்லச் சொன்னது.’ என்றார்.