
சென்னை: தமிழக அரசு அமல்படுத்த இருக்கும் மின்கண்டன உயர்வு மக்களுக்கு மு.க. ஸ்டாலின் கொடுக்கும் மற்றுமொரு பரிசு என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் யுவராஜா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டில் 3.16 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்டண உயர்வு வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு அமல்படுத்தப்படும். மின் கட்டண உயர்வு என்பது சாதாரண உயர்வு அல்ல; இது ஏற்க முடியாத ஒன்று. மக்கள் அன்றாட வாழ்க்கை செலவுகளை சந்திக்கவே இன்று பெரும் பாடுபடுகிறார்கள். இதை புரிந்துகொள்ளாமல், திறனற்ற திராவிட மாடல் அரசு மின் கட்டணத்தை உயர்த்துவது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் விரோத செயலாகும். இது நிர்வாக பிழையும், பொறுப்பற்ற அரசியல் செயலும்.