
அஜித்தான் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறார். ரேஸிங், சினிமா என சமீபத்தில் தொட்ட இடங்களிலெல்லாம் வெற்றியைப் பதிவு செய்திருந்தார் அஜித்.
அதைத் தொடர்ந்து சில நாள்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷண் விருதையும் பெற்றிருந்தார்.
கடந்த சில வருடங்களில் பேட்டிகள் ஏதும் அளிக்காத அஜித் தற்போது அடுத்தடுத்து பேட்டிகளைக் கொடுத்து அவருடைய வாழ்க்கையின் சில முக்கியமான பக்கங்கள் குறித்துப் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் மாஷபிள் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் அவருடைய ரேஸிங் கரியரின் தொடக்கத்திற்கு அவரின் பெற்றோர்கள் அளித்த ஆதரவு பற்றி பேசியிருக்கிறார்.
அஜித் பேசுகையில், “நான் முதலில் பைக் ரேஸிங்கைத் தொடங்கினேன். ஏனெனில் அது மிகவும் மலிவானது.
எனக்கு ஆதரவாக பெற்றோர்கள் இருந்ததற்கு நான் மிகவும் பாக்கியசாலியாகக் கருதுகிறேன்.
ஆனால், என் தந்தை மிகவும் நேர்மையாக, ‘அஜித், இது மிகவும் செலவை உண்டாக்கும் விளையாட்டு. எங்களால் உனக்கு ஆதரவளிக்க முடியாமல் போகலாம்.

ஆனால், நீ உன் ஸ்பான்ஸர்களைக் கண்டுபிடித்து, அதற்கு ஒரு வழி கண்டால், முன்னேறு,’ என்று கூறினார்.
நான் பள்ளியை விட்டு வெளியேறியப் பிறகு என் பெற்றோர்கள் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருந்தனர்.
அவர்கள், ‘படிப்பைத் தொடர்ந்து குறைந்தபட்சம் ஒரு பட்டம் பெற வேண்டும். இல்லையெனில் வேலை செய்யத் தொடங்க வேண்டும். நேரத்தை வீணடிக்கக் கூடாது.’ என்றனர், நான் வேலை செய்வதைத் தேர்ந்தெடுத்தேன்,” எனக் கூறியிருக்கிறார்.