• May 20, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி மாவட்டம், துறையூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“திருச்சியில் 31-ம் தேதி நடைபெற இருந்த மதசார்பின்மை காப்போம் பேரணி ஜூன் மாதம் 14-ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மட்டுமின்றி, சட்டத்தின் மீதும், மதசார்பின்மை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழக விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் குடியரசு தலைவரை கொண்டு பா.ஜ.க அரசு 14 கேள்விகளை கேட்க வைத்துள்ளது.

இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளது பற்றி கேட்கிறீர்கள். அவர் எதன் அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால், இந்தியா கூட்டணி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சந்தித்து ஒரு வருடம் ஆகிறது. தேவைப்படும் போது ஒன்றிணைந்து செயல்படும். தி.மு.க இந்திய கூட்டணியில் முக்கியமாக உள்ளது.

thol.thirumvalavan

கூட்டணி தொடருமா?

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது. வேறு எந்த கூட்டணியும் கூட்டணி என்கிற வடிவத்தோடு இல்லை. அ.தி.மு.க, பா.ஜ.க இணைந்து தேர்தலை சந்திப்போம் என கூறியுள்ளார்கள். ஆனால், அவர்கள் கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை. அவர்கள் கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்டக் கட்சிகள் கூட்டணி குறித்து எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.

தற்போது, எதிர்க்கட்சிகள் ஐக்கியமாக போதிய முகாந்திரங்கள் இல்லை. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. வரும் 2026 – ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *