• May 20, 2025
  • NewsEditor
  • 0

“என் மகன் மரணத்தில் சந்தேகம் உள்ளது, விபத்து வழக்கை சந்தேக மரண வழக்காக பதிவு செய்து என் மருமகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இறந்தவரின் தாயார் தென்மண்டல ஐ.ஜி-யிடம் புகார் அளித்துள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகார் கொடுத்த மரணமடைந்த சூரிய பிரகாஷ் பெற்றோர்

மதுரை காதக்கிணறு பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை ஊழியர் உமாராணி தென் மண்டல ஐ.ஜி-யிடம் அளித்த மனுவில், “சுகாதாரத்துறையில் பணியாற்றி நானும் என் கணவரும் ஓய்வுபெற்றோம். எங்கள் ஒரே மகன் சூரியபிரகாஷ் எஞ்சினியரிங் முடித்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்ததார்.

எங்கள் மகனின் காதல் திருமணத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எங்கள் செலவில் 6 பவுன் பெண்ணுக்கு கொடுத்து கடந்த 07.02.2022 அன்று திருமணம் நடத்தி வைத்தோம்.

அவர்கள் தேனிலவுக்காக கேரளா சென்று வந்த பிறகு மருமகள் நடவடிக்கைகள் சரியில்லை. என் மகனுடன் நிம்மதியாக வாழாமல் அடிக்கடி பிரச்னைகள் செய்து வந்தார். மேலும் விவாகரத்து செய்யச் சொல்லியும் கட்டாயப்படுத்தியு வந்தார். திருமணத்தை சட்டப்படி பதிவு செய்யாமலும், கர்ப்பம் தரிக்காமலும் திட்டமிட்டு காலம் கடத்தி வந்தார்.

இந்த நிலையில்தான் தூத்துக்குடியிலிருந்து என்னுடன் தினமும் பேசி வந்த மகன், 24.6.2023 அன்று நான் தொடர்ந்து போன் செய்தும் எடுக்கவில்லை.

அங்கிருந்த மருமகளையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. என் மகன், மருமகள், அவரது ஆண் நண்பர், இன்னும் சிலருடன் காரில் குற்றாலத்துக்கு சென்றதாகவும், அப்பொழுது விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே என் மகன் இறந்து விட்டதாகவும், தென்காசி மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று தூத்துக்குடியில் என் மகனுடன் வேலை செய்பவர் மறுநாள் தெரிவித்தபோதுதான் விஷயம் தெரியும்.

சூரிய பிரகாஷ்

அனைவரும் ஒரே காரில் சென்றபோது என் மகன் மட்டும் சம்பவ இடத்தில் இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து நடந்ததாக சொல்லப்படும் இடத்தில் மருமகள் மற்றவர்களிடம் என்னுடைய செல்போன் எண்னை கொடுத்து எனக்கு போன் செய்ய சொல்லி இருக்கிறார்.

ஆனால், தனக்கு தலையில் காயம் ஏற்பட்டு சுய நினைவில்லாமல் இருந்ததாக தனியார் மதுரையிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியதாக மருமகள் கூறுவது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்த சந்தேகத்தையும், மருமகள் நடவடிக்கைகள் பற்றி போலீஸ் விசாரணையில் கூறினோம். ஆனால், விசாரித்த ஆழ்வார்குறிச்சி போலீசார் ‘விபத்து வழக்கை மட்டும்தான் நாங்கள் விசாரிப்போம், மற்றவைகளை உயரதிகாரிகள் விசாரிப்பார்கள்’ என்று கூறி எங்களை அனுப்பி விட்டார்கள்.

இதற்கிடையில் மருமகள், என் மகனின் உடமைகளையும், முக்கியமான ஆவணங்களையும், செல்போனையும் எங்களிடம் ஒப்படைக்கவில்லை. மேலும், மகனுக்கு ஓராண்டு நினைவு தினத்தில் திதி, சடங்குகள் செய்வதற்கு மறுத்துவிட்டார்.

என் மகன் இறந்த இரண்டு மாதங்களிலேயே தன் நண்பருடன் நெருக்கமான இருக்கும் படங்களை இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் வெளியிட்டு வருவதும், இருவரும் சுற்றுலாக்கள் செல்வதும் என் மகன் மரணத்தில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

என் மகன் இறப்புக்கு பணியாற்றிய நிறுவனத்தில் கொடுத்த 58 லட்சம் ரூபாயையும் மருமகள் அபகரித்துக் கொண்டார். விபத்து காப்பீடு தொகையையும் கோரியுள்ளார். பணத்திற்காக என் மகனை திட்டமிட்டு கொலை செய்து விபத்து என நாடகமாடியுள்ளார்களோ என்ற சந்தேகம் உள்ளது.

இதற்கு மருமகளின் பெற்றோர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். ஆகவே மருமகளின் செல்போனை கைப்பற்றி விசாரித்தால் அவருக்குள்ள தொடர்புகள் தெரியவரும்.

மேலும், விபத்து நடந்த அந்த இடத்தில் மருமகளுடன் இருந்தவர்களை விசாரித்தால் உண்மை தெரியவரும். ஆகவே, என் மகனின் விபத்து வழக்கை, சந்தேக மரணம் என்று பதிவு செய்து விசாரித்து தகுந்த நீதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட ஐ.ஜி, தென்காசி எஸ்.பி-யிடம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *