
தற்போது மக்களிடம் மைக்ரோ கிரீன்ஸ் சாப்பிடும் பழக்கம் பிரபலமாகி வருகிறது. எளிமையாக வீட்டிலேயே விளைவித்துகூட இதை சாப்பிடலாம். அப்படிப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த மைக்ரோ கிரீன்ஸ் யார் சாப்பிடலாம், எப்படி வீட்டிலேயே விளைவிப்பது குறித்து விளக்கம் தருகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் உமாசக்தி.
வீடுகளுக்கு உள்ளேயே எளிய முறையில் தானியங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகளின் விதைகளில் இருந்து முளைத்த சிறு செடியைத்தான் மைக்ரோ கிரீன் என்கிறோம். விதைகளைப் பயிரிட்டு வளர்ப்பதைத்தான் மைக்ரோகிரீன்ஸ் முறை என்கிறோம். முழு தானியங்களை முளைக்கட்டி எடுத்துக்கொள்வதை போல், தானியங்களை விதைத்து, விதை முளைத்த 7 நாள்களுக்குள் அறுவடை செய்து சாப்பிடலாம். இதே முறையில் பயிர் செய்யப்பட்ட கீரைகள் மற்றும் காய்கறிச்செடிகளின் நாற்றுகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இந்த மைக்ரோ கிரீனில் வைட்டமின் A,C,K நிறைந்துள்ளன. தவிர பாலிஃபீனால் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸும் மைக்ரோ கிரீனில் இருக்கிறது.
100 கிராம் மைக்ரோ கிரீனில் 15-20 கலோரி தான் உள்ளது. இதில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக உள்ளது தான் இதற்கு காரணம்.
வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் அளவு அதிகமாக இருக்கிறது.

விதை முளைத்த இரண்டு நாள்களில், அதன் முளை வெளிவரும்போதே பயன்படுத்துவது முளைக்கட்டியப் பயறு. இன்னும் சில நாள்கள் வைத்து அதன் முளை தண்டிலிருந்து இலை வெளியே வந்த சில நாட்களில் பயன்படுத்துவதுதான் மைக்ரோ கிரீன்ஸ்!
எல்லோரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று தான் இது. கொலஸ்டிரால், டயாபடீஸ், இதயம் சார்ந்த நோய் உள்ளவர்கள் எல்லாம் இதை எடுத்துக்கொள்வது நல்லது. உடல் எடை குறைப்பதற்கு இது உதவியாக இருக்கும். விளைவித்த மைக்ரோ கிரீன்ஸை அதன் தண்டுப்பகுதி வரை எடுத்து பயன்படுத்தலாம். வேர்ப்பகுதியை பயன்படுத்தக்கூடாது. அது மண்ணுக்குள் இருப்பதால் அதை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.

வீட்டில் எப்படி வளர்க்கலாம்?
ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு மண் அல்லது டிஸ்யூ பேப்பர் போட்டு, அதில் முளைக்கட்டிய விதைகள் அல்லது விதைகளை அப்படியே போட்டு 5 முதல் 7 நாட்கள் வரை வீட்டிற்குள் வைத்திருந்தாலே மைக்ரோ க்ரீன்ஸ் முளைத்துவிடும். இதை பறித்து சாண்ட்விச், சாலட், பொரியல் என்று விதவிதமாக சாப்பிடலாம்.
கடுகு, பெருஞ்சீரகம், வெந்தயம், கோதுமை போன்ற நம்முடைய காலநிலைக்கு ஏற்ப முளைக்கும் விதைகளை நாம் மைக்ரோ கிரீன்ஸ் ஆக விளைவிக்கலாம். எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுதான் என்பதால், அனைவரும் கட்டாயம் எடுத்துக்கொள்ளலாம்” என்கிறார் உணவியல் நிபுணர் உமா சக்தி.