
‘லக்னோ vs ஹைதராபாத்!’
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது சன்ரைசர்ஸ் அணி. இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் லக்னோ அணி ப்ளே ஆஃப் வாய்ப்பையும் இழந்திருக்கிறது. லக்னோ அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழக்க அவர்கள் எடுக்கத் தவறிய 10-20 ரன்கள்தான் காரணம். ஏன் தெரியுமா?
லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்திருந்தது. பெரிய ஸ்கோர்தான். ஆனாலும் அவர்களுக்கு போதவில்லை. இந்த 205 ரன்களோடு கூடுதலாக ஒரு 15 ரன்களை அடித்திருந்தால் லக்னோவால் போட்டியை இன்னும் நெருக்கமாக கொண்டு சென்றிருக்க முடியும். அந்த கூடுதல் 15 ரன்களை லக்னோ எங்கே எடுக்காமல் கோட்டைவிட்டது?
‘நல்ல ஓப்பனிங!’
லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது அல்லவா. அந்த 7 விக்கெட்டுகளையுமே 11-20 வது அதாவது இரண்டாவது பாதியில்தான் இழந்தது. இந்த இரண்டாவது பாதியின் 11-15 வது ஓவர்களில்தான் லக்னோ அணி சறுக்கியது. பவர்ப்ளேயில் லக்னோ அணி 69 ரன்களை எடுத்திருந்தது.

மிட்செல் மார்ஷூம் மார்க்ரமும் இணைந்து 115 ரன்களை முதல் விக்கெட்டுக்கு எடுத்திருந்தனர். பவர்ப்ளேயில் லக்னோவின் ரன்ரேட் 11.5. அதேமாதிரி 16-20 டெத் ஓவர்களில் லக்னோவின் ரன்ரேட் 11.8. இந்த இரண்டு பகுதிகளிலுமே லக்னோவின் ரன்ரேட் நன்றாகத்தான் இருக்கிறது.
‘அந்த 5 ஓவர்கள்!’
பிரச்சனையே மிடில் ஓவர்களில்தான். 7-15 இந்த 9 ஓவர்களில் லக்னோ அணி 77 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ரன்ரேட் 8.5 மட்டுமே. இந்த மிடில் ஓவரையே கூட இரண்டாக பிரிக்கலாம். 7-10 இந்த 4 ஓவர்களில் 39 ரன்களை எடுத்திருந்தனர். ரன்ரேட் 9.75. அதேநேரத்தில் 11-15 இந்த 5 ஓவர்களில் 38 ரன்களை மட்டுமே லக்னோ எடுத்திருந்தது. ரன்ரேட் 7.6 மட்டுமே. ஆக, லக்னோ அணி இங்கேதான் கோட்டைவிட்டது.
இந்த 5 ஓவர்களுக்குள்தான் நன்றாக ஆடிக்கொண்டிருந்த மிட்செல் மார்ஷ் மார்க்ரம் கூட்டணி உடைந்தது. ரிஷப் பண்ட் நம்பர் 3 இல் வந்து வழக்கம்போல சொதப்பி வெளியேறினார். இந்த 5 ஓவர்களும் சரியாக சென்றிருந்தால் லக்னோ அணி கட்டாயம் 20 ரன்களை கூடுதலாக எடுத்திருக்க முடியும்.

சன்ரைசர்ஸ் அணி இந்த மிடில் ஓவர்களில் சிறப்பாக ஆடியிருந்தது. 7-15 இந்த மிடில் ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 99 ரன்களை எடுத்திருந்தது. அதாவது, லக்னோவை விட மிடில் ஓவர்களில் 22 ரன்களை சன்ரைசர்ஸ் அதிகமாக எடுத்திருந்தது. இந்த 22 ரன்கள்தான் இரண்டு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக மாறியது.

இந்த 22 ரன்கள்தான் லக்னோ அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பையும் பறித்தது.