
பாலியல் வன்கொடுமை என்பதே கொடூரம்தான். கொடூரத்திலும் கொடூரம்… பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை. தற்போது இந்த வழக்கில், 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, சட்டத்தின் மீதும்… நீதியின் மீதும் ஓரளவு நம்பிக்கையைக் கூட்டுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் இளம்பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோக்களாகப் பதிவு செய்து மிரட்டி, தொடர்ந்து கொடுமைகளை இழைத்து வந்தது ஒரு கும்பல். பாதிக்கப்பட்ட ஒரு பெண், துணிந்து தன் சகோதரரிடம் கூற, விஷயம் வெளியில் வந்து தமிழ்நாடு கடந்தும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பாலியல் வன்கொடுமையின்போது, `அண்ணா… பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா வலிக்குது’ என்று ஒரு பெண் எழுப்பிய குரல் பதிவு வெளியாகி, கல்லையும் கரைத்தது. தொடர் கொந்தளிப்பு, போராட்டங்கள் என உணர்ச்சிப்பிழம்பானார்கள் மக்கள். ஒருவழியாக வழக்கு பதியப்பட்டாலும் அப்போது, ஆட்சியில் இருந்த அ.தி.மு.க-வின் நிர்வாகி, வேண்டப் பட்டவர்கள் பெயர்கள் எல்லாம் இதில் அடிபட, நடவடிக்கையில் அத்தனை வீரியம் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்களே பயந்து பின்வாங்கும் வகையில், புகார் கொடுத்த பெண்ணின் பெயரை பொதுவெளியில் பகிர்ந்து அதிர்ச்சிக் கிளப்பினார், அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பாண்டியராஜன். போராட்டங்கள் மேலும் தீவிரமாகவே… வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.
ஆறு ஆண்டுக்கால விசாரணைக்குப் பின், மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளார். பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் மொத்தமாக ரூ.85 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்ட நிலையில், ‘தைரியத்துடன் துணிந்து நின்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம்’ என்று உயர்த்தி அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தைரியமூட்டி வாக்குமூலங்கள் பெற்ற விசாரணை அதிகாரி பச்சையம்மாள்; வழக்கை உறுதியோடு நடத்திய சி.பி.ஐ; பணபலம், அரசியல் பலம், அதிகார பலங்களையெல்லாம் குற்றவாளிகள் காட்டியபோதும், சாட்சியத்திலிருந்து பிறழாமல் இறுதி வரை தீரத்துடன் நின்ற அந்த 48 சாட்சிகள்… என அனைவருமே நன்றிக்குரியவர்கள்.
‘வெளியில் சொன்னால் பெண்ணுக்குத்தான் பாதிப்பு’ எனச் சமூகம் உருவாக்கி வைத்துள்ள பொதுவிதியைப் பார்த்து பயந்து ஒதுங்காமல், தமக்கு நேர்ந்த அநீதிக்காகவும், இனி வேறு யாருக்கும் இது நடந்துவிடக் கூடாது என்பதற்காகவும் சளைக்காமல் போராடிய அந்த 8 பெண்களுக்கும், அவர்களுக்குத் துணை நின்ற குடும்பத்தினருக்கும் ராயல் சல்யூட்.
தோழிகளே… ‘பாலியல் குற்றவாளிகள்தான் கூனிக்குறுக வேண்டும் நாமல்ல…’ என்கிற துணிச்சல் தீயைப் பற்றவைத்து தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் இந்தச் சகோதரிகள். இந்தத் தீ ஒருபோதும் அணைந்துவிடக் கூடாது. எப்போதுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு தோள் கொடுத்து தொடர்ந்து எழுப்புவோம் நீதிக்கான குரல்களை!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்