
பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்கான சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரங்களில் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை கேரள அரசு பின்பற்றாவிட்டால், தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மழைக்காலம் தொடங்கும் முன்பு முல்லை பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையில் பராமரிப்புப் பணிக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டுவது, வல்லக்கடவு வனச் சாலையை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரங்களில் கேரள அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.