
பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை அழிக்க மத்திய அரசு ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி இரவு அதிரடியாக தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் கடந்த 8-ம் தேதி அதிகாலை இந்தியா மீது தாக்க ஆரம்பித்தது. பாகிஸ்தான் தொடர்ச்சியாக ஏவுகணைகளை கொண்டும், ட்ரோன்களை கொண்டும் இத்தாக்குதலை நடத்தியது.
இத்தாக்குதலின் போது அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோயிலை குறிவைத்து பாகிஸ்தான் தாக்கியது. ஆனால் அத்தாக்குதலை வெற்றிகரமாக இந்திய விமானப்படையும், ராணுவமும் சேர்ந்து முறியடித்தது.
இது குறித்து மேஜர் ஜெனரல் கார்த்திக் கூறுகையில், ”பாகிஸ்தான் ராணுவம் அமிர்தசரஸில் உள்ள ராணுவ நிலைகள், எல்லையையொட்டிய மக்கள் குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை மூலம் எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதில் அமிர்தசரஸ் பொற்கோயிலை தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாக அறிந்து கொண்டோம். எனவே கூடுதலாக ஏவுகணை தடுப்பு சாதனங்களை நிறுத்தினோம்.
நாங்கள் எதிர்பார்த்தது போல் 8-ம் தேதி அதிகாலை நேரத்தில் மிகவும் இருள் சூழ்ந்திருந்த நேரத்தில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் பொற்கோயிலை குறிவைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தது.
அத்தாக்குதலை தடுக்க ஏற்கெனவே நாங்கள் முழு அளவில் தயாராக இருந்தோம். எனவே பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவுகணை தடுப்பு சாதனங்கள் மூலம் சுட்டுவீழ்த்தினோம். இதனால் பொற்கோயில் மீது ஒரு ஏவுகணை கூட தாக்காமல் பார்த்துக்கொண்டோம்.
இந்திய ராணுவம் 9 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் 7 இடங்களில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

லாகூர் அருகில் உள்ள லஷ்கர் இ தொய்பா தலைமையகம், பஹவல்பூரில் உள்ள ஜெய்ஸ் இ மொகமத் தீவிரவாத முகாம்கள் சரியாக குறிவைத்து அழிக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தையோ அல்லது பொதுமக்களையோ குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தவில்லை”என்று தெரிவித்தார்.
இந்திய வான் தடுப்பு சாதனங்கள் பாகிஸ்தானுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை தடுத்து நிறுத்தி அழித்தன. 7-ம் தேதி தொடங்கிய தாக்குதல் கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது.