
இலங்கை நாட்டைச் சேர்ந்தவரின் அடைக்கலம் கோரும் மனு மீதான விசாரணையின்போது, இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது பேசு பொருளாகியுள்ளது.
நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நபரின் மனுவை இன்று விசாரித்தது.
இவர் 2018ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
2022ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் இவரது தண்டனைக்காலத்தை 7 ஆண்டுகளாகக் குறைத்து உத்தரவிட்டது.
சிறையில் இருந்து வெளியான உடனேயே அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், நாடு கடத்தப்படும் வரை அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துவந்த மனுதாரர், தான் விசாவுடன் இந்தியாவுக்கு வந்ததாகவும், தனது உயிருக்கு இலங்கையில் ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது மனைவியும் குழந்தைகளும் இந்தியாவில் வாழ்வதாகவும், தான் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தடுப்பு காவலில் இருப்பதாகவும், நாடுகடத்தல் செயல்முறை தொடங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கில் நீதிபதி தீபங்கர் தத்தா, “இந்தியா உலகம் முழுவதுமிருந்து வரும் அகதிகளை வரவேற்க வேண்டுமா? நாங்கள் ஏற்கெனவே 140 கோடி மக்கள் தொகையுடன் சிரமத்தில் இருக்கிறோம். இது ஒன்றும் வெளி நாட்டவர்களை மகிழ்விக்கும் தர்மசாலை அல்ல.” என்றும் கூறியுள்ளார்.
மனுதாரரின் வழக்கறிஞர் அரசியலமைப்பின் பிரிவு 21 (உயிர் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்தல்) மற்றும் பிரிவு 19, பேச்சு மற்றும் இயக்க சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்குவதாக வாதிட்டார்.
நீதிபதி தத்தா, மனுதாரர் சட்டப்படி கைது செய்யப்பட்டிருப்பதனால் பிரிவு 21 மீறப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பிரிவு 19 இந்திய குடிமக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அத்துடன் “மனுதாரர் இந்தியாவில் தங்க என்ன உரிமை இருக்கிறது?” என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கறிஞர், மனுதாரர் ஒரு அகதி என்றும் அவரது சொந்த நாட்டில் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் வாதிட்டதற்கு, அவரை வேறு நாடுகளுக்குச் செல்லுமாறு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.