
பாஜகவுடன் தவெக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக சில அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். அதற்கு தூபம் போடும் விதமாக, ‘பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லையே. இது எல்லாரும் இணைய வேண்டிய காலம்.’ என தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருக்கிறார். தமிழிசை புது வெடியை கொளுத்திப் போட்டிருக்கும் நிலையில், இதுசம்பந்தமாக தவெகவின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரை தொடர்புகொண்டு பேசினோம்.
பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெகவும் இணைய வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கும் கருத்துகளைப் பார்த்திருப்பீர்கள். நேற்று தமிழிசை சௌந்தராஜனும் இதுசார்ந்து பேசியிருக்கிறார். இதுசம்பந்தமாக உங்களின் நிலைப்பாடு என்ன?
பா.ஜ.கதான் எங்களின் கொள்கை எதிரி என்பதை முதல் மாநாட்டிலேயே கூறிவிட்டோம். பா.ஜ.கவுடன் கூட்டணி கிடையாது என்பதையும் மீண்டும் மீண்டும் தெளிவுப்படுத்திவிட்டோம். எங்களின் தலைவரின் குரலாகத்தான் நாங்கள் ஒலிக்கிறோம்.
தமிழகம் முழுவதும் எங்கள் கட்சிக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து எங்களை கூட்டணியில் இணைக்க அவர்கள் விரும்பலாம். ஆனால், எங்களுக்கு அதில் உடன்பாடு இருக்க வேண்டும் அல்லவா? அவர்கள்தான் எங்களின் கொள்கை எதிரி. அதனால் அவர்களுடன் கூட்டணிக்கு சாத்தியமே இல்லை. பாஜகவுடன் கூட்டணி என பேசுபவர்கள் அரசியலுக்காக எதையோ பேச வேண்டும் என்றே பேசுகிறார்கள் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை, சரி. ஆனாலும் கூட்டணி குறித்து தலைவர் அறிவிப்பார் என்றே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு பக்கம் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. இன்னொரு பக்கம் தேசிய ஜனநாயகக் கூட்டணி. எஞ்சியிருக்கும் சிறிய கட்சிகளும் இந்த இரண்டு கூட்டணிகளை நோக்கி நகர்வதாகவே தெரிகிறது. யதார்த்தமாக யோசியுங்கள். இப்போதைக்கு தவெகவுக்கு வலுவான கூட்டணியை உருவாக்கும் வாய்ப்பே இல்லையே?
திமுக எங்களின் அரசியல் எதிரி. பாஜக எங்களின் கொள்கை எதிரி. இவர்கள் இருவருடனும்தான் நாங்கள் கூட்டணி வைக்கமாட்டோம். மற்ற எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணிக்குத் தயாராகவே இருக்கும். கூட்டணி பற்றி பேசவே இன்னும் நேரமிருக்கிறது. பிப்ரவரி வரைக்கும் கூட்டணிகளை உருவாக்க கால அவகாசம் இருக்கிறது.
கட்சி ஆரம்பித்ததிலிருந்தே த.வெ.க தலைவர் அதிமுகவை விமர்சிக்கவே இல்லையே. அரசியல் சூழலில் திமுக மீது எந்தளவுக்கு விமர்சனம் இருக்கிறதோ அதே அளவுக்கு அதிமுக மீதும் விமர்சனங்கள் இருக்கிறதே. அப்படியிருக்க நீங்கள் அதிமுகவை விமர்சிப்பதே இல்லையே?
தேவையில்லாமல் ஒரு கட்சியை எப்படி விமர்சிக்க முடியும்? ஒன்று அவர்கள் எங்களை எதிர்த்துப் பேச வேண்டும் அல்லது பிரச்னைகளில் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர்கள் எடுக்க வேண்டும். அப்போதுதானே அவர்களை எதிர்க்க முடியும். கடந்த 8 மாதங்களில் விமர்சிக்கும் வகையில் அதிமுகவின் செயல்பாடு இல்லையே.

பாமக என்று ஒரு கட்சி இருக்கிறது. அவர்கள் அவர்களின் வேலையைப் பார்க்கிறார்கள். நாங்கள் எங்களின் வேலையைப் பார்க்கிறோம். அப்படியிருக்க, நாங்கள் ஏன் தேவையில்லாமல் சில கட்சிகளை விமர்சிக்க வேண்டும்? எங்கள் கொள்கைக்கு எதிராக அவர்கள் எதையாவது செய்தால் கண்டிப்பாக விமர்சிப்போம்.
வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறீர்கள். அந்த வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு காரணமான பாஜகவுடன் தானே அதிமுக கூட்டணியில் இருக்கிறது?
வக்ஃபு விஷயத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்னவென்பதை பார்க்க வேண்டும். அவர்கள் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் கட்டாயம் விமர்சிப்போம். எங்களின் தலைவரைப் பற்றி பேசினால் கட்டாயம் விமர்சிப்போம். மற்றபடி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளை விமர்சிப்பதையே சரியென நினைக்கிறோம்.
உங்களின் கருத்து அதிமுக – தவெக கூட்டணி என வெளியில் பேசப்பட்ட விஷயங்களுக்கு வலு சேர்ப்பதாகத்தானே இருக்கிறது?
மீண்டும் மீண்டும் சொல்கிறேன். திமுகவோடும் பாஜகவோடும் நாங்கள் கூட்டணி வைக்கப்போவதே இல்லை. அவர்கள் எங்களின் எதிரிகள். எங்களின் எதிரிகளோடு நிற்கும் வரை அதிமுகவோடும் கூட்டணி இல்லை.

உங்கள் தலைமையில் கூட்டணி அல்லது தனித்துப் போட்டி என்பது போன்று மேடைகளில் பேசுகிறீர்கள். அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், தனித்து போட்டியிடும் அளவுக்கு உங்களிடம் கட்டமைப்புப் பலம் இருக்கிறதா? இன்னும் நீங்கள் மா.செக்களையே முழுமையாக நியமிக்கவில்லையே?
எல்லா கட்டமைப்புப் பணிகளும் விரைவாக நடந்துகொண்டிருக்கிறது. எங்களின் பூத் கமிட்டி வலுவாக இருக்கிறது. பெரிய கட்சிகளில் பூத் கமிட்டி வலுவாக இருக்கிறது என்கிற வாதத்தையும் ஏற்கமாட்டோம். திமுகவும் அதிமுகவும் வெறும் ஒரே ஒரு வாக்கை வாங்கிய பூத்தை என்னால் காண்பிக்க முடியும். எனில், அவர்களின் பூத் உறுப்பினர்களே அவர்களுக்கு வாக்களிக்கவில்லையா?
எந்த பெரிய கட்சியிலும் பூத் கமிட்டி என்பது நிரந்தரமாக இருக்காது. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாகத்தான் முழுமையாக பூத் கமிட்டியை நியமிப்பார்கள். கடைசிக்கட்டத்தில் அதிலும் மாற்றம் இருக்கும். மேலும், பணம் கொடுத்தால்தான் அவர்கள் வேலையும் செய்வார்கள். ஆனால், எங்களின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தன்னிச்சையாக துடிப்பாக நிற்கின்றனர். அவர்களுக்கான பயிற்சியையும் முறையாக வழங்கி வருகிறோம்.

அரசியல் என்பது அன்றாட செயல்பாடு இல்லையா? விஜய் இதை உணர்ந்ததாகத் தெரியவில்லையே. கட்சி ஆரம்பித்ததிலிருந்து ஒரு 7-8 கூட்டங்களில் பேசியிருக்கிறார். அவ்வளவுதானே. எப்போது களத்துக்கு வருவார்? எப்போது பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பார்?
துணை முதலமைச்சர் உதயநிதி தன்னுடைய துறைசார்ந்த மானியக் கோரிக்கைக்கே சட்டமன்றத்துக்கு செல்லவில்லையே. மழை வெள்ளத்தின்போது மழையெல்லாம் முடிந்த பிறகு 3 மணிக்கு மேல் களத்துக்கு வந்தாரே. இதையெல்லாம் கேள்வி கேட்க வேண்டும். தினசரி கல்யாணத்துக்கும் காது குத்துக்கும் செல்வதெல்லாம் களசெயல்பாடு கிடையாது.
கடந்த ஓராண்டில் எதிர்க்கட்சித் தலைவர் எந்த களத்துக்குச் சென்றார் என சொல்லுங்கள். எங்களின் தலைவர் வரவேண்டிய விஷயங்களுக்கு தவறாமல் களத்துக்கு வருவார். பரந்தூர் விசிட்தான் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். தேவைப்படும் நேரத்தில் மக்களுக்காக கட்டாயம் களத்தில் நிற்பார்.
விஜய்யின் அடுத்தக்கட்டத் திட்டம் என்ன?
தமிழக முழுவதும் தலைவர் சுற்றுப்பயணம் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். வெகு விரைவிலேயே சுற்றுப்பயணம் தொடங்கும்.