• May 19, 2025
  • NewsEditor
  • 0

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கியதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அருகிலுள்ள ஏலகிரி ஏரியில் மாசுபாடு ஏற்படுவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ரயில்வே கழிவறைகள், ரயில் நிலையம், இடையம்பட்டி, ஹோட்டல் தெரு ஆகிய பகுதிகளிலிருந்து வரும் கழிவுகள் இந்தக் கால்வாய் வழியாக ஏலகிரி ஏரியில் கலப்பதாகவும், இதனால் ஏரிக்கரையோர நிலங்களின் தன்மை பாதிக்கப்படுவதாகவும் உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறியதாக இருந்த இந்தக் கால்வாய், கழிவுகளின் அளவு அதிகரித்ததால் அகலப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது கால்வாயில் நெகிழிப் பைகள், மது பாட்டில்கள், குப்பைகள் குவிந்து, துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உருவாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து நம்மிடம் வந்து பேசிய சமூக ஆர்வலர்கள் , “கால்வாயில் குப்பைகள் தேங்குவதால் துர்நாற்றம் தாங்க முடியவில்லை. மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரயில்வே துறை அதிகாரிகள் இயந்திரங்களைப் பயன்படுத்தி கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு, குப்பைகள் கரையில் குவித்துச் செல்கின்றனர். இவ்வளவு முக்கியம் வாய்ந்த இடத்தில் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு. தற்போது முன்பைவிட அதிக கழிவுகள் தேங்கியுள்ளன. ஏரியில் கழிவுகள் கலப்பது சுற்றுச்சூழலுக்கும், மக்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தல். இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்” என்பவர்கள், கால்வாயைத் தொடர்ந்து சுத்தம் செய்யவும், கழிவு மேலாண்மைக்கு நிரந்தர தீர்வு காணவும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர். 

இது தொடர்பாக அப்பகுதியிலிருந்த பொதுமக்களிடம் விசாரித்த‌போது, “கால்வாய்க்கு அருகே பேருந்து நிறுத்தம் மற்றும் ஆரம்பநிலை பள்ளி இயங்கி வருவதால், மாணவர்கள் உட்படப் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஏலகிரி ஏரியில் கழிவுகள் கலப்பது, சுற்றுச்சூழல் மாசுபாட்டை அதிகரிப்பதுடன், உள்ளூர் விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்துவதோடு வாகன ஓட்டிகள் மற்றும் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளையும் முகம் சுழிக்க வைக்கிறது. இதற்கு உடனடி தீர்வு காண, ரயில்வே துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் முன்வர வேண்டும்” எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது… இவ்விடத்தை விரைந்து சுத்தம் செய்து மாற்று ஏற்பாடு செய்ய உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *