• May 19, 2025
  • NewsEditor
  • 0

நாட்டில் வளர்ச்சியடைந்த மாநிலமாக விளங்கும் மகாராஷ்டிராவில் உள்ள கிராமங்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இக்கிராமங்களில் போதிய போக்குவரத்து வசதி, கல்வி வசதி இல்லாமல் இருக்கிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மருத்துவ வசதியும் இல்லாமல் இருக்கிறது. மாநில அரசு நகரங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது. கல்வி உரிமைச்சட்டத்தின் படி கிராமத்தில் 5வது வகுப்பு வரையிலான பள்ளிகள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கவேண்டும். ஆனால் மகாராஷ்டிரா அரசு பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை காரணம் காட்டி அந்த பள்ளியை அருகில் உள்ள கிராமத்து பள்ளியோடு இணைத்து விடுகிறது.

இதனால் மாணவர்கள் 3 முதல் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகமான மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிடும் அவல நிலை இருந்து வருகிறது. மகாராஷ்டிரா முழுவதும் 8213 கிராமங்களில் பள்ளியே இல்லாத நிலை இருக்கிறது. இக்கிராமத்தை சேர்ந்த மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. மத்திய கல்வித்துறை செயலாளர் இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் மிகவும் குறைந்து இருக்கிறது. மத்திய அரசு இவ்விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்து இருப்பதை தொடர்ந்து மாநில அரசு மாநிலம் முழுவதும் பள்ளிகள் இல்லாத கிராமத்தில் பள்ளிகளை திறக்க முடிவு செய்திருக்கிறது.

இதில் சாங்கிலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 142 பள்ளிகளும், சந்திராப்பூரில் 90 பள்ளிகளும், பால்கர் மாவட்டத்தில் 30 பள்ளிகளும் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தவிர பள்ளிகளில் சேராமல் இருக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வர சிறப்பு முகாம்களை அமைத்து நடவடிக்கை எடுக்கும்படி மாநில கல்வித்துறை அமைச்சர் தாதா புஸ் பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *