
தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் சர்புதீன் இவர் விழாக்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு விற்பனை செய்து வந்தார்.
நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த இவரது மகன் அப்பாஸ் வெளிநாடு சென்று விட்டார். இவரது சகோதரி சமரத் பீவி (47) இவரது மகன் முகமது ரியாஸ் (19). நெய்வேலி தென்பகுதியில் அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான இடத்தில், பட்டாசு கடை நடத்தி வந்தனர்.
மேலும், உரிய அனுமதி பெறாமல் சணல் கொண்டு தயாரிக்கப்படும் நாட்டு வெடிகளை மறைமுகமாக தயாரித்து வந்தனர்.
கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு நாட்டு வெடிகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்று வழக்கம் போல் முகமது ரியாஸ், சுந்தரராஜன் (60) உள்ளிட்ட 5 பேர் அந்த பட்டாசு ஆலையில் நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
மூன்று பேர் வெளியே இருந்த நிலையில் முகமது ரியாஸ், சுந்தரராஜன் இருவரும் குடோனுக்குள் வெடி தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது, ஏற்பட்ட வெடி விபத்தில் அந்த கட்டடம் தரைமட்டமானது.
இதில் முகமது ரியாஸ் மற்றும் சுந்தரராஜன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி இடி பாடுகளில் சிக்கி கிடந்த இருவரது உடலை மீட்டனர்.
மேலும் அசமாவிதம் ஏற்படாமல் இருக்க மூன்று மணி நேரத்திற்கும் மேல் விபத்து நடந்த இடத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எஸ்.பி., ராஜாராம், பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன், மற்றும் வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இதுகுறித்து கூறுகையில், “அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயார் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வருவாய்த்துறை, போலீசார் மூலம் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட முழுவதும் பட்டாசு குடோன்கள் கண்காணிக்கப்படும்” என்றார்
விபத்து குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், “இப்பகுதிகளில் இது போல் இன்னும் பல நாட்டு வெடி தயாரிக்கும் குடோன்கள் செயல்படுகிறது. உரிய அனுமதி பெறாமல் இதை நடத்துகின்றனர்.
வாட்டாத்திக்கோட்டை போலீஸாருக்கு இது குறித்து தகவல் தெரிந்தும் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதில்லை. மேலும், பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்களை துளியும் கண்டு கொள்வதில்லை.
வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் செயல்பட்டு வந்த குடோனில் தான் விபத்து ஏற்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், அனுமதியின்றி செயல்படும் பட்டாசு ஆலைகள் குறித்து கணக்கெடுத்து அதை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை.
தற்போது திருவிழா காலம் என்பதால் நாட்டு வெடியின் தேவைகள் அதிகரித்துள்ளது. இதனால் உரிய அனுமதியும் பெறாமல், உரிய விதிகளை பின்பற்றாமல் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க தவறி அலட்சியம் காட்டியதால் தற்போது இரண்டு உயிர் பறிபோய் விட்டது.
இனியாவது காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் உடனடி தீவிரம் காட்ட வேண்டும்” என அப்பகுதியி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.