
மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் அருகில் உள்ள அக்கல்கோடில் சென்ட்ரல் டெக்ஸ்டைல் மில் இருக்கிறது. இத்தொழிற்சாலையில் அதிகாலை 3.45 மணிக்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 100 தண்ணீர் டேங்கர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 13 மணி நேரம் போராடிய பிறகே தீயை அணைக்க முடிந்தது. இத்தீவிபத்தில் 3 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இத்தீவிபத்தில் டெக்ஸ்டைல் மில் உரிமையாளர் உஸ்மான்(80) மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல் மில்லில் இருந்த படுக்கை அறையில் இருந்து மீட்கப்பட்டது. தீவிபத்தில் ஒன்றரை வயது யூசுப் என்ற குழந்தை தனது தாயின் கையில் இருந்தபடி உயிரிழந்திருந்தது. அனைவரும் தொழிற்சாலையில் உறங்கிக்கொண்டிருந்தபோது இந்த தீவிபத்து ஏற்பட்டதால் அவர்களால் வெளியில் தப்பிக்க முடியவில்லை.
இத்தீவிபத்தில் தீக்காயத்தால் 3 பேர் உயிரிழந்திருந்தனர். மற்ற 5 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருந்தனர். தீயணைப்புத்துறையினர் முதலில் 3 பேரின் உடலை மீட்டனர். அதன் பிறகு 13 மணி நேர போராட்டத்திற்கு பிறகே எஞ்சிய 5 பேரின் உடல்களை தீயணைப்புத்துறையினரால் மீட்க முடிந்தது. தீவிபத்து ஏற்பட்டவுடன் 5 பேரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள படுக்கை அறைக்குள் ஓடியதாகவும், ஆனால் கரும்புகை சூழ்ந்ததால் அவர்களால் மூச்சுவிட முடியாமல் இறந்துவிட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
இதில் தீயணைப்புத்துறை வீரர்கள் 3 பேரும் காயம் அடைந்தனர். மின்கசிவு காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இத்தீவிபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.