
இந்தியா பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வாரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், நேற்று முன்தினம் (மே 17) மீண்டும் தொடங்கியது.
இதில், பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட ராஜஸ்தான் அணியும், 10 வருடங்களுக்குப் பிறகு பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறத் துடிக்கும் பஞ்சாப் அணியும் நேற்று (மே 18) மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 70 ரன்கள் அடித்தார்.
அதைத்தொடர்ந்து, 220 என்ற சற்று கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஹெட்மயர் என அடுத்தடுத்து வந்த வீரர்களின் சொதப்பலால் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
பஞ்சாப் அணி இந்த வெற்றியின் மூலம், 10 வருடங்களுக்குப் பிறகு பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது.
சென்னை அணி உடனான அடுத்த போட்டி..!
தோல்விக்குப் பிறகு பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், “நாங்கள் எங்கள் ஆட்டத்தைச் சிறப்பாகத் துவங்கினோம். துவக்க ஆட்டக்காரர்கள் பவர்பிளேவில் 90 ரன்கள் எடுத்து அசத்தினர்.
இதைத் தாண்டி அவர்களிடமிருந்து பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அந்த வேகத்தைத் தொடர்ச்சியாக எங்களால் எடுத்துச் செல்ல இயலவில்லை.
பிட்ச் மிக வித்தியாசமாக இருந்தது. எங்களிடம் உள்ள அதிரடி ஆட்டக்காரர்களை எண்ணிப் பார்க்கையில் இன்றைய இலக்கு அடையக் கூடியது.

போட்டியை வெற்றியுடன் முடிக்க சற்று கடினமாக இருந்தது. நாங்கள் அதைச் செய்திருக்க வேண்டும். இரண்டு அனுபவம் மிகுந்த வீரர்கள் தங்களின் கடமையைச் சிறப்பாகச் செய்தனர்.
நிச்சயமாக அடுத்த சீசனில் பல முன்னேற்றங்களைச் செய்தாக வேண்டும். இப்போது பெரிதாக எதையும் முயற்சிக்கவில்லை. எங்களின் முதல் கடமை சென்னை அணி உடனான அடுத்த போட்டியை ஜெயிப்பதே.” என்று கூறினார்.