
“நாங்க எல்லாம் ராஜ பரம்பரை…என சாதிப் பெருமை பேசி ராஜநடை என்கிற பெயரில் நடந்து காண்பித்து ட்ரோல் ஆன இளைஞர் தினகரன், தற்போது, ‘சூப்பர்டா தம்பி…’ என பாராட்டும் அளவுக்கு, உண்மையாகவே கம்பீர நடை போட ஆரம்பித்திருக்கிறார்.
அதற்குக்காரணம், அவர் சொன்ன “பிறப்பால் அனைவரும் சமம்” என்ற அந்த ஒற்றை வார்த்தையும் அவருக்குள் நிகழ்ந்த மாற்றமும்தான்! பலரும் பாராட்டிக்கொண்டிருக்கும் சூழலில், நாமும் பாராட்டிவிட்டு, இளைஞர் தினகரனிடம் பேசினேன்…
“என்னோட சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம். என்னோட அப்பா விவசாயி. எனக்கு ரெண்டு அக்கா, ஒரு அண்ணன், கடைக்குட்டி பையன் தான் நான். பத்தாவது ஃபெயில். ஐ.டி.ஐ படிச்சிருக்கேன். படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காததால போட்டோகிராஃபரா வேலை பார்த்துக்கிட்டிருக்கேன்.
‘வாங்க ராஜபரம்பரை’ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க..!
நான், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம். எங்களை மேல இருக்கிற ஆதிக்க சாதிக்காரங்க அடிமைப்படுத்தினாங்க. சாதிப்பிரச்னை எல்லாம் நடந்திருக்கு. அப்போ, எங்க சாதிக்காங்க எனக்கு ஹெல்ப் பண்ணினாங்க.
அப்போதான், நம்ப சாதிக்கும் வீரம் இருக்கு. சாதிக்கும் ஒரு வரலாறு இருக்கு. அப்படின்னு நினைச்சுத்தான், ஒரு சாதிக்கட்சியில சேர்ந்தேன். ஆதிக்க சாதியினர் எங்களை அடிமைப் படுத்தினதாலதான் நாங்களும் ஆண்டப் பரம்பரைதான்னு தெரியட்டும்னு ‘நீயா நானா’ல அப்படி பேசினேன். அப்படி, பேசினதிலிருந்து என்னை கிண்டல் பண்ணாத ஆளே கிடையாது. ‘வாங்க ராஜபரம்பரை’ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.
சாதியால ஒரு புண்ணியமும் இல்லை
ஒரு கட்டத்துல இப்படி என்னை கூப்பிட ஆரம்பிச்சு, ராஜபரம்பரைங்குற வார்த்தையை கேட்டாலே மண்டை வெடிக்கிற மாதிரி ஆகிடுச்சு. என் ஃப்ரண்டோட அம்மா என்கிட்ட பாசமா பேசுவாங்க. ஆனா, நான் இப்படி பேசினதிலிருந்து எங்கிட்ட பேசுறதையே நிறுத்திட்டாங்க. எந்த அடைமொழியை கெத்து பெருமைன்னு நினைச்சேனோ அந்த அடைமொழியே என்னை வெத்தாக்கி, வெறுமை ஆக்கிடுச்சு. ஒரு கட்டத்துல நானே உணர ஆரம்பிச்சுட்டேன். சாதியால ஒரு புண்ணியமும் இல்லைன்னு ஒரு கட்டத்துல நானே மனப்பூர்வமா உணர ஆரம்பிச்சுட்டேன். அதோட வெளிப்பாடுதான், நான் நீயா நானாவுல மீண்டும் கலந்துக்கிட்டு ‘பிறப்பால் அனைவரும் சமம்’னு சொன்னேன்.
இன்னும் சொல்லப்போனா, இதுக்கு முன்னாடி சாதி வெறியோட இருந்தேன். இப்போ, நான் சாதியை ஒழிக்கிறதுல வெறியா இருக்கேன். ‘என்னப்பா, இப்படி திடீர்னு மாறிட்டியே… நம்ப சாதிக்கு ஒரு வரலாறு’ அப்படின்னு ஆரம்பிக்கும்போதே, போதும் நிறுத்துங்கன்னு சொல்லிட்டு, ‘சாதின்னு ஒண்ணு எங்க இருக்கு? காட்டுங்க பார்க்கலாம்’னு திருப்பி கேட்டா அமைதியா போயிடுறாங்க.
பழையபடி என்னோட எல்லா சாதி ஃப்ரெண்ட்ஸும் பேச ஆரம்பிச்சபிறகுதான், நான் புதுசா இந்த உலகத்துல பிறந்த மாதிரி இருக்கு. நான், அஞ்சு வருஷத்துக்கு முன்னால அப்படி பேசினப்போ, என்னை கிண்டல் பண்ணி வெறுத்து ஒதுக்கினவங்க, ஓரங்கட்டினவங்க எல்லாரும் இப்போ முன்பைவிட அன்பா, நட்பா, பாசமா பழகுறாங்க. அது, எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.
இனிமே அம்பேத்கர் கொள்கைப்படிதான் நடப்பேன்..!
என் மனசுக்குள்ள பாரமெல்லாம் குறைஞ்சு இப்போ மனசுக்கு நிறைவா இருக்கு. அதுமட்டுமில்ல, இப்போ, ‘அண்ணல்’ அம்பேத்கரோட புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சுட்டேன். ‘பிறப்பால் அனைவரும் சமம்’ என்ற உயர்ந்த சிந்தனையை விதைத்த அம்பேத்கருக்கு இந்த நேரத்துல நன்றியை தெரிவிச்சுக்கிறேன். இனிமே அம்பேத்கர் கொள்கைப்படிதான் நடப்பேன். சமூகம் பற்றின புரிதல் வர ஆரம்பிச்சிடுச்சு. என்னோட கடைசி மூச்சு இருக்கிறவரைக்கும், சாதி ஒழிப்புதான் என்னோட பயணமா இருக்கும். இது, உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு இல்ல. ரொம்ப தீர்க்கமா யோசிச்சு எடுத்த முடிவு. நான், இனி மாறமாட்டேன்.
யார்ன்னே தெரியாதவங்க எல்லாம் இப்போ எனக்கு சால்வை போர்த்தி, கைக்குலுக்கி பாராட்டுறாங்க. ஏன்னு கேட்டா, ‘பிறப்பால் அனைவரும் சமம்’ அப்படின்னு, நீ சொன்ன அந்த ஒற்றை வார்த்தைதாம்பான்னு சொல்லிட்டு போறாங்க. அந்த வார்த்தைக்கு இவ்வளவு சக்தி இருக்கான்னு இப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன். இனிமே, அம்பேத்கர் -பெரியார் வழியிலதான் பயணிப்பேன்” என்கிறவர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பதாகவும் கூறுகிறார்.
“விஜய் அண்ணாவை சின்ன வயசிலேர்ந்தே பிடிக்கும். தமிழ்நாட்டுல விஜய் அண்ணாவால மட்டும்தான் சாதி வெறி, மதவெறி இல்லாத ஆட்சியைக் கொடுக்க முடியும். அதுவும், விஜய் அண்ணா அம்பேத்கர்- பெரியாரை தன்னோட கொள்கைத் தலைவரா வெச்சிருக்கார். அதுமட்டுமில்லாம, அம்பேத்கர் புத்தகத்தையும் வெளியிட்டார். அதெல்லாம்தான், விஜய் அண்ணா இன்ஸ்பிரேஷன் ஆகி, அவரோட கட்சியில சேர்றதுக்கு காரணம்.
வீரச்செல்வி அக்கா அறிவுரை சொன்னது, எல்லோரும் என்னை ட்ரோல் பண்ணினது எல்லாமே 50 சதவீதம் காரணமா இருந்தாலும் விஜய் அண்ணா அம்பேத்கரை கொள்கைத் தலைவரா ஏற்றுக்கிட்டதும், நான் மாறுவதற்கு முக்கியம் காரணம். த.வெ.கவுல நான் சேர்ந்ததும் பலரும் என்னை கட்சிகளில் சேரச்சொல்லி கூப்பிட்டாங்க. காசெல்லாம் தர்றதா சொன்னாங்க. நான், எதுக்குமே போகல. தி.மு.க பெண்களுக்கு நல்லாட்சியை கொடுக்கிறேன்னு சொல்லிட்டு, ஓசி பஸ்ஸுல போறீங்கன்னு பெண்களை அவமதிக்குது. எனக்கு இப்போ 25 வயசு ஆகுது. நான், இதுக்கு முன்னாடி தி.மு.கவுக்கு ஓட்டு போட்டுக்கிட்டிருந்தேன். எதிர்பார்த்த எந்த வித மாற்றமும் வரல.
தி.மு.க ஆட்சியிலதான், நிறைய சாதிக்கொடுமை எல்லாம் நடக்குது. ஆணவப்படுகொலைகளும் நடக்குது. அ.தி.மு.க ஆட்சியும் கிட்டத்தட்ட இதேமாதிரிதான். பா.ம.கவை பற்றி சொல்ல வேணாம். எங்கக்கிட்ட சண்டைக்கு வந்து அடிமைப்படுத்தினதே அவங்கதான். தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வேணும். அந்த மாற்றத்தை விஜய் அண்ணாவாலதான் கொடுக்கமுடியும் . அதனால, அவர் வழியிலதான் பயணிப்பேன்” என்கிறார்.