
‘லக்கி பாஸ்கர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மோஸ்ட் வான்டட் இயக்குநர்களில் முக்கியமானவராக இருக்கிறார் டோலிவுட் இயக்குநர் வெங்கி அத்லூரி.
‘லக்கி பாஸ்கர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யாவுடன் கைகோத்திருக்கிறார் வெங்கி அத்லூரி.
இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ‘ரெட்ரோ’ படத்தின் புரொமோஷன் நிகழ்வில் வைத்து சூர்யா அறிவித்திருந்தார்.
படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் அப்போது அறிவித்திருந்தனர். இதைத் தாண்டி வேறு அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை.
சூர்யா நடிக்கும் 46-வது திரைப்படம் இது. இப்படத்திற்கான பூஜை இன்று காலை ஹைதராபாத்தில் நடைபெற்றிருக்கிறது.
பூஜைக்கு சிறப்பு விருந்தினராக இயக்குநர் திரி விக்ரம் கலந்துகொண்டிருக்கிறார். பூஜையில் படக்குழுவினர் பலரும் பங்கேற்றிருக்கிறார்கள்.
படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜுவும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். ஏற்கெனவே, சூர்யா நடிப்பில் உருவான ‘வணங்கான்’ படத்தின் சில காட்சிகளில் மமிதா பைஜூ நடித்திருந்தார்.

அதன் பிறகு அத்திரைப்படம் கைவிடப்பட்டது. அதை தொடர்ந்து இப்போது வெங்கி அத்லூரி இயக்கத்தில் சூர்யாவுடன் மீண்டும் கமிட்டாகியிருக்கிறார் மமிதா பைஜூ. ‘ப்ரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெட் வேகத்தில் பறந்துகொண்டிருக்கிறார் மமிதா.
விஜய்யுடன் ‘ஜனநாயகன்’, பிரதீப் ரங்கநாதனுடன் ‘டியூட்’, விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’, சூர்யாவுடன் ‘சூர்யா 46’ என அடுத்தடுத்து பலமான லைன்-அப்கள் மமிதாவிடம் இருக்கின்றன.
‘சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யா நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.
சூர்யாவுடன் மீண்டும் இணைவது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஜி.வி, “‘சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யா சாருடன் இணைகிறேன். ‘சூரரைப் போற்று’ படத்தைப் போலவே இப்படமும் ஸ்பெஷலான ஒன்று. இந்த ஒன்று உங்களுக்கானது சூர்யா சார்.

பாடல்களும் சிறப்பாக வந்திருக்கின்றன,” எனப் பதிவிட்டு எதிர்பார்ப்புகளை உயர்த்தியிருக்கிறார். படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டான்டன் ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள்.
இம்மாதம் இறுதியில் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு கோடைக்கு படத்தைத் திரைக்குக் கொண்டுவரவும் படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். சூர்யா 46, குடும்பங்கள் கொண்டாடும் ஃபன்னான என்டர்டெயினராக இருக்கும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி கூறியிருக்கிறார்.