
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
கோடை விடுமுறை மற்றும் சுற்றுலா என்றாலே , மலை பிரதேசங்களுக்கும் பிரபல சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டுமா என்கிற என்னுடைய சந்தேகம் இந்த முறை நீங்கியது. எங்களுடைய சுற்றுலா திட்டம் கொண்டாட்டங்களுடன் கொஞ்சம் வரலாற்று நிகழ்வுகளையும் நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நாங்கள் சென்ற இடம் தான் இந்திரா காந்தி மியூசியம்.
புதுதில்லியில், இந்திரா காந்தி வசித்துவந்த ,சப்தர்ஜங் சாலையில் உள்ள அவரது இல்லம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, தற்போது பார்வையாளர்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு இடமாக உள்ளது.
திங்கட்கிழமை தவிற வாரத்தின் பிற நாட்களில் காலை 9.30 மணிமுதல் மாலை 5 மணிவரை மக்கள் பார்வைக்கு திறந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் , தேசிய சுதந்திர போராட்ட காலத்திலிருந்து துவங்கும் பல அற்புதமான புகைப்படங்கள், இந்திரா காந்தி அம்மையார் பயன்படுத்திய பொருட்கள், நேரு மற்றும் இந்திரா காந்தி குடும்பத்தாரின் அபூர்வ புகைப்படங்கள், தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்வில் இந்திராவின் பல அரிய பதிவுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
1984 ம் ஆண்டு அக்டோபர் 31ம் நாள் தனது சொந்த பாதுகாவலர்கள் சத்வத் சிங் மற்றும் பீன்ட் சிங் ஆகியோரால் இந்திரா காந்தி சுட்டு கொல்லப்பட்ட சரித்திர சோகம் நிகழ்ந்த இந்த இடத்தை காணும்போது , நம்மை அறியாமலேயே கண்ணில் நீர்த்துளிகள் எட்டிப்பார்க்கின்றன.
அவர் கடைசியாக நடந்து வந்த பாதை முழுமையாக பாதுகாக்கப்பட்டு சுடப்பட்ட இடம் கண்ணாடிகளால் மூடி தனியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
உள்ளே நுழையும் இடத்திலிருந்து எதையும் தவிர்த்து வேகமாக கடந்து போக முடியாதவாறு ஏராளமான வரலாற்று பதிவுகள் புகைப்படங்களாகவும் , செய்தி குறிப்புகளாகவும் ஆவணங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன .

இந்திரா காந்தியின் இளமைக்காலங்களில் நேருவுடனும் , காந்திஜியுடனும் அவர் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் பல்வேறு காலகட்டங்களில் அவரின் தோற்றம் கருப்பு வெள்ளையாக நம்மை ஈர்க்கிறது
அந்த துயரமான சம்பவம் நடந்தபோது , இந்திரா உடுத்தியிருந்த ரத்தம் தோய்ந்த புடவை, காலில் அணிந்திருந்த கருப்பு நிற செருப்பு, தோள் பை போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதை கண்டு கனத்த இதயத்துடன் கடக்க வேண்டி உள்ளது .
1959 களில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து 1980 களில் கடைசி முறையாக பிரதமர் பதவி ஏற்றது வரையிலான இந்திராவின் அரசியல் வாழ்க்கையும், தனிப்பட்ட வழக்கையும் அழகான புகைப்படங்களாக காட்சி படுத்தப்பட்டுள்ளது .
1977 நாடாளுமன்ற தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியடைந்தது மற்றும் 1971, 77 தேர்தல்களில் வெற்றிபெற்று பிரதமராக தேர்வு பெற்றது , அவரது ஆட்சி காலத்தில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது , ஒரு கட்டத்தில் அதிருப்தி கோஷ்டியால் இந்திரா கட்சியை விட்டு நீக்கப்பட்டது ,எமர்ஜென்சி போன்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டங்களில் தலைப்பு செய்திகளாக வெளியான பல மொழி தினசரிகளின் தொகுப்புகள் அழகாக தொகுத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது . தமிழ் நாளேடும் இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

இந்திரா பயன்படுத்திய அவரின் நூலகம், படுக்கையறை , வரவேற்பு அறை, கலந்துரையாடல் கூடம் ஆகியவை நேர்த்தியாக பாதுக்கப்பட்ட கண்ணாடிகளுக்கு வெளியே இருந்து காணும் வகையில் உள்ளது.
1966 ,1967,1971 மற்றும் 1980 என நான்கு முறை பிரதமராக இந்திரா பதவி ஏற்ற போது அவர் போட்ட கையொப்பம் கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது ,
குழந்தைப்பருவ புகைப்படங்கள், மஹாத்மா காந்தியோடு அவர் இருக்கும் படங்கள், திருமணத்திற்கு இந்திரா உடுத்திய எளிமையான புடவை , பயன்படுத்திய தண்ணீர் குவளைகள், தட்டு போன்ற அவரின் அன்றாட பயன்பாட்டில் இருந்த சில பொருட்கள் என நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது .
தனது அலுவலகத்தில் பயன்படுத்திய கூர் படுத்தப்பட்ட பென்சில் , மை காய்ந்துபோன பேனாக்கள் , மூக்கு கண்ணாடி , ரப்பர் , கத்தரிக்கோல் , என சின்ன சின்ன பொருட்களை கூட மிஸ் பண்ணாமல் வரிசை படுத்தி வைத்திருப்பதை பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருந்தது .
வாங்கிய பன்னாட்டு விருதுகள் , பெறப்பட்ட விதவிதமான அன்பளிப்புகள் , சார்லி சாப்ளின் ஆட்டோகிராப் , இந்திரா வரைந்த ஓவியங்கள் , நேரு தனது மகளுக்கு எழுதிய கடிதங்கள் , கணவர் பெரோஸ் உடன் சில நினைவுகள் என இந்திராவின் மொத்த வாழ்க்கையும் நம் கண் முன்னாடி வந்து போகிறது .

இந்திராவின் நினைவு அருங்காட்சியை தொடர்ந்து , அவரைப்போன்றே படுகொலை செய்யப்பட்ட ராஜீவ்காந்தியின் வாழ்க்கை வரலாற்று பதிவுகள் இடம்பெற்றுள்ளது
இந்திரா கண் தானம் செய்ய எழுதிக்கொடுத்த பத்திரம் மற்றும் ஏராளமான ஞாபகப்பொருட்கள், படுகொலை தொடர்பான புகைப்படங்கள், செய்தித்தாள் கட்டுரைகள் என ஒரு சாம்ராஜ்யத்தின் அனைத்து நிகழ்வுகளும் காட்சிகளாகவும் சாட்சிகளாகவும் கண் முன்னே விரிவதை கண்டு முடித்து வெளியே வரும்போது , இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான ஆளுமையாக இயங்கிய அரசியல் தலைவருக்கான இந்த நினைவு இல்லம் நம்மை கனத்த இதயத்தோடு வெளியில் அனுப்புகிறது .
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.