
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ஏஸ்’. ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, பி.எஸ்.அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் என பலர் நடித்துள்ளனர்.‌ கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். பின்னணி இசைஅமைத்துள்ளார். 7சிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் 23-ம்தேதி வெளியாகிறது.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் சேதுபதி கூறியதாவது: நான் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் என்னை நம்பி, என் திறமையை நம்பி, எனக்காகச் சிபாரிசு செய்தவர் ஆறுமுகம். இருக்கும்போது வரும் உதவிகள் வேறு, ஆனால் நம்மை யாரென்றே தெரியாத காலத்தில், நம் மீது யாரோ ஒருவர் வைக்கிற நம்பிக்கைதான் மிகப்பெரியது. இதில் நாயகியாக நடித்துள்ள ருக்மணி திறமையான நடிகை. பப்லு இதில் நல்ல ரோல் செய்துள்ளார். யோகிபாபு இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோ. அவரைப்பற்றி சமீபத்தில் தவறான செய்திகள் வருகிறது. அது உண்மையில்லை, அவர் நல்ல மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் அவரை எல்லோரும் ரசிப்பார்கள். இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும். இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.