
நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழினப் பேரெழுச்சிப் பொது கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சீமான், “மே 18 துயரம் மிகுந்த நாள். மே 18-ம் தேதி தமிழக மக்களின் துயர நாள் என்று ஏன் அரசு விடுமுறை அறிவிக்கவில்லை.
ஒரு இனம் தனக்கென எப்போது ஒரு நாடு அடைகிறதோ அப்போதுதான் விடுதலை கிடைக்கும். காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக ஆகிய நான்கு பேரும் தமிழ் இனத்தின் பகைவர்கள்.
கோவை மாவட்டத்தில் இன்று மட்டும் ஏன் அரசு பொருட்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கி உள்ளார்கள். இத்தனை நாள்கள் இல்லாமல் இன்றைக்கு அங்கு ஏன் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நான் பிரபாகரன் மகன் என்பதால் இப்படி செய்கிறார்கள். “ என்றார்.

இது சமூகவலைதளங்களில் பரபரப்பான விவாத பொருளானது. நாம் தமிழர் கட்சியினர் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். இதற்கு திமுகவினரும் நாம் தமிழர் மீது விமர்சனம் வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “கோவை அரசு பொருட்காட்சியில் 17வது நாளில் (18.5.2025) நுழைவு கட்டணமாக ரூ.1,61,000 வசூல் செய்யப்பட்டுள்ளது. 9,442 பெரியவர்கள், 1,937 குழந்தைகள் என்று மொத்தம் 11,379 மக்கள் பொருட்காட்சிக்கு வந்துள்ளனர்.

கடந்த 17 நாள்களில் மொத்தம் 1,12,207 மக்கள் பொருட்காட்சிக்கு வருகை புரிந்துள்ளனர். இதற்காக மொத்தம் ரூ.15,79,230 நுழைவு கட்டணம் வசூலாகியுள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.