
உச்சநீதிமன்றத்திடம் கேள்விகள் கேட்டு குடியரசு தலைவர் அனுப்பியுள்ள குறிப்பினை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காளம், கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஜார்கண்ட், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அரசின் ஆலோசனையின்படி, கடந்த 13-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 143 பிரிவின்கீழ், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தின் முன் 14 கேள்விகளை எழுப்பி குறிப்பு ஒன்றினை அனுப்பியது தாங்கள் அறிந்த ஒன்று. இந்த குறிப்பு எந்த மாநிலத்தையும் அல்லது தீர்ப்பையும் குறிப்பாக குறிப்பிடவில்லை என்றாலும், தமிழக அரசு, தமிழக ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் விளக்கம் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை கேள்விக்குள்ளாக்குவதே இதன் நோக்கம். தனது அரசாங்கத்தால் பெறப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இது மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான கூட்டாட்சி அமைப்பையும், அதிகாரப் பகிர்வையும் நிலைநிறுத்துவதாக அமைந்துள்ளது. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டப்பேரவைகளால் இயற்றப்படும் சட்டங்கள், மத்திய அரசால் நியமிக்கப்படுபவரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நபருமான ஆளுநரால் தடைபடுவதை திறம்பட தடுக்கும் வகையில் உள்ளது.